
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பற்றி எரிகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive I Facebook I Archive
கட்டிடம் பற்றி எரியும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வீட்டுக்கு அடங்காத பிள்ளையை! ஆசிரியர் திருத்தலாம்! ஆசிரியருக்கும் அடங்க மறுக்கும் பிள்ளையை போலீஸ் திருத்தும்! ஈரானின் பதில் தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல் ராணுவத் தளங்கள்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காஸா, லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஈரான் தரப்பில் சில வாரங்களுக்கு முன்பு பதிலடி கொடுக்கப்பட்டது. உடனடியாக இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 26ம் தேதி ஈரானின் 20 நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய காட்சி என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை 2024 செப்டம்பரில் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்ததைக் காண முடிந்தது. அதாவது ஈரான் தரப்பில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டபோது இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். எனவே, இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்று கருதித் தொடர்ந்து தேடினோம்.
தொடர்ந்து தேடிய போது, இந்த வீடியோவை 2024 ஆகஸ்டில் சிலர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதாவது ஈரான் முதல் தாக்குதலுக்கு முன்பாகவே இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. போர்த்துக்கீசிய மொழியில் எக்ஸ் தள பதிவு வெளியாகி இருந்தது. மொழியாக்கம் செய்து பார்த்த போது, நோவா ப்ரோக்ரெஸ்ஸோ (Novo Progresso) என்ற பகுதியின் avenida Dr. Isaias Antunes என்ற இடத்தில் தீவிபத்து ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: romanews.com.br I Archive
எனவே, கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியுடன் ஆகஸ்ட் 11, 2024 அன்று வௌியான செய்திகள் பல நமக்குக் கிடைத்தன. அதில், நோவா ப்ரோக்ரெஸ்ஸோவின் தொழில்களை தீவிபத்து நாசம் செய்தது என்பது போல் தலைப்பிட்டிருந்தனர். நோவா ப்ரோக்ரெஸ்ஸோ என்பது வடக்கு பிரேசிலில் உள்ள ஒரு பகுதி என்பது நமக்கு தெரியவந்தது.
உண்மைப் பதிவைக் காண: tripadvisor.com I Archive
குறிப்பிட்ட இடத்தில் கூகுள் மேப், ஸ்ட்ரீட் வியூ கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். நமக்கு சரியான இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடிய போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் தொடக்கப் பகுதியிலிருந்த இடத்துடன் ஒரு கடையின் புகைப்படம் ஒத்துப்போனது. அது, “Churrascaria e Restaurante Polentão” என்ற உணவகம் என்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த தீவிபத்து பிரேசிலில் நடந்தது என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் காட்சி என்று பரவும் வீடியோ தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
பிரேசிலில் 2024 ஆகஸ்டில் பிரேசிலில் ஏற்பட்ட தீவிபத்தின் வீடியோவை இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ஈரான் தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
