
பாகிஸ்தானில் ஒரு இந்து கோவிலை கழிப்பறையாக மாற்றிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
வருண தேவ மந்திர், மனோரா தீவு கடற்கரை, கராச்சி என்று ஆங்கிலத்தில் போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ள ஒரு பழங்கால கோவில் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், செய்தி ஒன்றின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், “இந்து சொந்தங்களே:-பாக்கிஸ்தான் கராச்சியில் 1000 வருட பாரம்பரிய இந்து கோயிலை கழிவறையாக மாற்றி வைத்துள்ள அவலத்தைப் பாருங்கள்…..
நமது நடு சென்டர் இந்துக்களிடமும், இந்துக்களுக்கெதிரான திருட்டு திமுகவிற்கு கடந்த #மக்களவை தேர்தலில் வாக்களித்த மற்றும், இப்போதைய #உள்ளாட்சி_தேர்தலில் வாக்களிக்க உள்ள உங்கள் முகநூல் அல்லது அக்கம் பக்கம் வீட்டு மானங்கெட்ட இந்துக்களிடம் இந்த பதிவையும் ஆதாரத்தையும் காட்டுங்கள். முடிந்தால் அருகே உள்ள மதம் மாறிய கிறித்துவ முஸ்லிம்களிடமும் காட்டி இது சரியா என்றும் கேளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, தேசதுரோகிகளை கிழிக்கலாம் வாங்க என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Kubendran P என்பவர் 2019 டிசம்பர் 24ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
செய்தி இணைப்பு, புகைப்படம் எல்லாம் பார்க்கும்போது செய்தி உண்மையானது என்றே நம்பத் தோன்றுகிறது. ஆனால், இந்த செய்தியை வெளியிட்ட ஊடகம் நம்பகமானதா என்ற கேள்வியும் எழுகிறது.
அந்த செய்தியை பார்த்தோம். 2017ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி அந்த செய்தி வெளியாகி இருந்தது. “1000ம் ஆண்டு பழமையான இந்து கோவிலை சுற்றுலாப் பயணிகளுக்கான கழிவறையாகப் பயன்படுத்தும் பாகிஸ்தான்” என்று தலைப்பிட்டுள்ளனர்.
செய்தியின் லீட் பகுதியில், “பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்களுக்கு தங்கள் மசூதி, வழிபாட்டுத் தலங்கள், மத உணர்வுகளைப் பாதுகாக்க முழு உரிமையும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கே என்ன நடக்கிறது… பாகிஸ்தானில் 1000ம் ஆண்டு பழமையான இந்து கோவில் ஒன்று கழிப்பறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்ந்து படித்தபோது, “தற்போது இந்த கோவில் பாகிஸ்தான் இந்து கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இந்த பழமையான கோவிலை பாதுகாக்க பராமரிக்க புலம்பெயர்ந்தோர் சொத்து பராமரிப்பு வாரியம் எதுவும் செய்யவில்லை. பராமரிப்பு இன்மை காரணமாக இந்த கோவில் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்து வருகிறது. இதன் சுவர்கள் மற்றும் அறைகள் மனோராஸ் கடற்கரைக்கு வரும் சுற்றலா பயணிகளின் கழிப்பிடமாகவே மாறிவிட்டது.

ஈரப்பதமான காற்று மிகவும் வேலைப்பாடு மிக்க சுவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருகிறது. இந்த கோவிலை பராமரித்து வரும் ஜிவ்ராஜ் என்பவர் கூறுகையில், 2008ம் ஆண்டு இந்த கோவில் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறதா என்று மனோரா கண்டோன்மெண்ட் வாரியத்திடம் கேட்டோம். ஆனால், அப்படி எந்த ஒரு ஆவணமும் இல்லை என்று கூறிவிட்டார்கள். ஆனாலும் இந்த கோவில் உள்ள நிலம் பாகிஸ்தான் கடற்படையின் கண்டோன்மெண்ட் பகுதியில்தான் வருகிறது. ஆனால், கண்டோன்மெண்ட் இதை பராமரிக்கவில்லை. இந்த கோவிலை 1970ம் ஆண்டு சிலர் புதுப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு பாரம்பரிய சின்னங்களை புனரமைக்கும் தொழில்நுட்பம் தெரியாது. இதுவும் இந்த கோவில் பாழ்பட காரணமாகிவிட்டது. இந்த கோவிலில் கடைசியாக 1950ல் பூஜை நடந்தது” என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த சொத்து இந்துக்கள் வசம் இருப்பதும், கோவிலை அவர்கள் பராமரிக்காமல் விட்டதும் தெரிகிறது.
இதன் மூலம் தலைப்புக்கும் செய்திக்கும் சம்பந்தமே இல்லை என்பது தெரிந்தது. தலைப்பைப் பார்க்கும்போது கோவிலை பாகிஸ்தான் அரசு அல்லது உள்ளூர் நிர்வாகம் கழிப்பறையாக மாற்றிவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது. ஆனால், இந்த கோவில் பாகிஸ்தான் இந்து கவுன்சில் கட்டுப்பாட்டில் இருப்பதும் அவர்கள் இதை பராமரிக்காமல் விட்டதும் தெரியவந்துள்ளது. இதனால், சிதிலமடைந்து யாரும் வராத கோவில் சுவற்றை மறைவிடமாக மாற்றிவிட்டார்கள் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையில் அந்த கோவில் கழிப்பறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறதா… கோவில் தொடர்பாக வேறு செய்தி உள்ளதா என்று தேடினோம்.
அப்போது கோவில் தொடர்பான பல செய்திகள் நமக்கு கிடைத்தன. புக்ஃபேக்ட் என்ற இணையதளத்தில் இந்த செய்தி லீட் தவிர்த்து மற்றவை அப்படியே இருந்தது. மேலும் அந்த செய்தியில் அமெரிக்க தூதரின் நிதி உதவியோடு இந்த கோவில் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் இந்த கோவிலுக்கு அருகில் ஒரு குருத்வாராவும் தேவாலயமும் உள்ளது என்றும், அவை எல்லாம் முறையாக பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில் இந்த கோவில் மட்டும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தி எப்போது வெளியானதா என்று அதில் இல்லை. ஆனால், இந்த செய்தியை எடுத்து விஷமத்தனமான தலைப்பு வைத்து entertales.com செய்தி வெளியிட்டிருக்கலாம் என்று தெரிந்தது.
booksfact.com | Archived Link |
தொடர்ந்து தேடிய போது பாகிஸ்தானின் முன்னணி ஊடகமான dawn 2016ம் ஆண்டு வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதில் இந்த கோவிலை கலாச்சாரத்துக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் புனரமைத்து வருவதாகவும் அமெரிக்க தூதரகம் இதற்கான நிதி உதவியை செய்துவருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். dawn பயன்படுத்தி அதே படத்தைத்தான் entertales.com வெளியிட்டிருந்தது. 2018ம் ஆண்டு வெளியான மற்றொரு செய்தியில் இந்த கோவில் வெற்றிகரமாக புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.

dawn.com | Archived Link 1 |
dailytimes.com.pk | Archived Link 2 |
நம்முடைய ஆய்வில்,
கராச்சியில் உள்ள பல நூற்றாண்டு பழமையான இந்து கோவில் பராமரிப்பு இன்றி இருந்துள்ளது உறுதியாகிறது.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் இந்து கவுன்சில் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ள தகவல் கிடைத்துள்ளது.
இந்து கவுன்சில் இந்த கோவிலை பராமரிக்காததால் சிதிலமடைந்ததும், கடற்கரைக்கு வருபவர்கள் இதை ஒதுங்குமிடமாக பயன்படுத்திய செய்தியும் கிடைத்துள்ளது.
அமெரிக்க தூதரக நிதி உதவியோடு இந்த கோவிலை புதுப்பித்திருக்கிறார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “கராச்சியில் பராமரிப்பு இன்றி இருந்த இந்து கோவில் கழிப்பறையாக மாற்றப்பட்டது” என்று பகிரப்படும் தகவல் உண்மையோடு தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு கொஞ்சம் உண்மையும் பொய்யான தகவலும் சேர்த்து உருவாக்கப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாகிஸ்தானில் இந்து கோவில் கழிப்பறையாக மாற்றப்பட்டதா? – பதற்றத்தை ஏற்படுத்தும் பதிவு!
Fact Check By: Chendur PandianResult: Partly False
