
இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: X Post I Archive
தொழிற்சாலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது போன்ற வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேலின் முக்கியமான ராணுவ தளத்தில், ஹிஸ்புல்லா அமைப்பினர் சக்தி வாய்ந்த மிஷில் வெடிகுண்டு வீசி தாக்குதல்… மிக பெரிய சேதம் என தகவல்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்ரேல் ராணுவ தளத்தின் மீது லெபனான் நாட்டைச் சார்ந்த பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்திய காட்சி என்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. ஆனால், வீடியோவை பார்க்கும் போது ஏதோ தொழிற்சாலையில் நடந்த விபத்து போன்று தெரிகிறது. எனவே, இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அதில், சீனாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2017, 2018, 2020 என்று பல ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. சிலர் இதை சீனாவில் நடந்தது என்றும் சிலர் இதை சிங்கப்பூரில் நடந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
சீனா, ரசாயன ஆலை விபத்து என்று சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, 2015ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி வெளியான செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில் வீடியோ அகற்றப்பட்டிருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சிகளை புகைப்படமாக மாற்றிப் பயன்படுத்தியிருந்தனர். அதில், சீனாவின் செஜியாங் (Zhejiang) மாகாணத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் வீடியோ இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு இணையதளத்தில் இந்த சம்பவம் நவம்பர் 17, 2015 அன்று நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: military.com I Archive I mirror.co.uk I Archive
இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஹிஸ்புல்லா தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்ரேலின் முக்கியமான ராணுவ தளம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன. 2015ம் ஆண்டு சீனாவின் ரசாயன ஆலை விபத்தை 2024ல் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதல் என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சீனாவின் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தின் வீடியோவை ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளத்தை தாக்கிய ஹிஸ்புல்லா” என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
