வங்கதேசத்தில் புத்த விஹார் எரிக்கப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: x.com I Archive 1 I Facebook I Archive 2

புத்தர் சிலை எரிக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பங்களாதேஷ் கங்கராசரியில் புத்த விஹார் ஜிஹாதிகளால் எரிக்கப் பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


உண்மை அறிவோம்:

வங்கதேசத்தின் கக்ராச்சாரி (Khagrachhari) மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. சிறுபான்மையினர் குறிப்பாக புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் தாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புத்த விஹார் தாக்கப்பட்டதாகவும், புத்தர் சிலை எரிக்கப்பட்டதாகவும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

எரிக்கப்பட்ட புத்தர் சிலை புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த புகைப்படத்தை இந்துத்துவா ஆதரவு ஊடகங்களில் வெளியிடப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், "சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ரங்குனியாவில் (Rangunia) அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கோவில் மற்றும் மடாலயத்திற்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ விபத்தால், புத்த மடாலயத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. புத்தர் சிலை எரிக்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

2024 ஜனவரி சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தேடிய போது வங்கதேச ஊடகங்களில் வெளியான செய்திகள் கிடைத்தன. தீ வைத்த நபரை போலீசார் கைது செய்த தகவலும் நமக்குக் கிடைத்தது.


உண்மைப் பதிவைக் காண: hinduvoice.in I Archive 1 I hindupost.in I Archive 2

இந்த எரிந்த புத்தர் சிலை புகைப்படம் வங்கதேசத்தில் எடுக்கப்பட்டதுதான். ஆனால், தற்போது வன்முறை ஏற்பட்டுள்ள கக்ராச்சாரி மாவட்டத்தில் இது எடுக்கப்பட்டது இல்லை. 2024 ஜனவரி மாதம் வங்கதேசத்தின் வேறு ஒரு இடத்தில் எரிக்கப்பட்ட புத்த மத மடாலயத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று செய்திகள் கூறுகின்றன. பழைய புகைப்படத்தை இப்போது நடந்தது போன்று தவறாக பதிவிட்டுள்ளனர். பழைய படம் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது.

முடிவு:

2024 ஜனவரியில் வங்கதேசத்தில் புத்த கோவில் எரிக்கப்பட்டபோது பகிரப்பட்ட புகைப்படத்தை தற்போது வங்கதேசத்தின் கக்ராச்சாரி மாவட்டத்தில் 2024 செப்டம்பரில் நிகழ்ந்த வரும் வன்முறையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Claim Review :   வங்கதேசத்தில் ஜிஹாதிகளால் புத்த கோவில் தாக்கப்பட்டு, புத்த சிலை எரிக்கப்பட்டது!
Claimed By :  Social Media Users
Fact Check :  MISSING CONTEXT