
மகளிருக்கு ரூ.5000ம் உரிமைத் தொகை வழங்கிவிட்டு, அதை வசூலிக்கும் வகையில் அரசு பேருந்துகளில் மறைமுகமாகக் கட்டணம் உயர்த்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாங்கிய பயணச் சீட்டின் புகைப்படம் ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டில் 1.13 கோடி மகளிருக்கு ஓட்டு போட 5000 ரூபாயை கோடை நிதி, உரிமை நிதி என்று லஞ்சமாக கொடுத்துவிட்டு.., எஅதை மறைமுகமாக 5000 வழிகளில் விலை உயர்வு, கட்டணம் உயர்வு என விலைவாசி உயர்த்தி வசூலிக்கிறது தீமுக அரசு.!
ஸ்ரீவில்லிபுத்தூர் – மதுரை 75 ரூபாயாக இருந்த அரசு பேருந்து கட்டணம் தற்போது 100 ரூபாய், இதுபோல தமிழ்நாடு முழுக்க அனைத்து வழித் தடங்களிலும் பேருந்து கட்டணத்தை முன்னறிவிப்பு இல்லாமல் உயர்த்திவிட்டது தீமுக அரசு. தலா 5000 ரூபாய் தேர்தல் லஞ்சம் பெற்றது 1.13 கோடி பெண்கள் மட்டும்தான், ஆனால் அதை 8 கோடி தமிழ்நாட்டு மக்களிடமும் விலைவாசியை உயர்த்தி வட்டியோடு வசூலிக்கிறது திருட்டுத் தீமுக அரசு.! தமிழ்நாட்டு மக்களை இப்படி சுரண்டும் கொள்ளைக்கார தீமுகவை வரும் தேர்தலோடு ஒழித்துக் கட்டுவோம்.!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தினசரி பேருந்தில் பயணம் செய்யும் தெரிந்தவர்களிடம் விசாரித்த போது வழக்கமான கட்டணத்தைத்தான் செலுத்தினோம் என்று தெரிவித்தனர். கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக யாரும் கூறவில்லை.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, மதுரையைச் சார்ந்த ஊடக நண்பர்கள் மூலம் ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்த மதுரைக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் எவ்வளவு கட்டணம் என்று விசாரிக்கச் சொன்னோம். அவர்களுக்கு இந்த டிக்கெட்டின் புகைப்படத்தையும் அனுப்பினோம். அவர்கள் விசாரித்துவிட்டு “வழக்கமான பேருந்துகளில் ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாம் அனுப்பியிருந்த பயணச்சீட்டானது குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்தாகும். அதற்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதியுடைய பேருந்தில் பயணம் செய்துவிட்டு சாதாரண பேருந்து கட்டணம் வசூலிக்கவில்லை என்று தவறாகக் குற்றம்சாட்டியுள்ளனர்” என்றனர்.
வேறு ஆதாரங்கள் கிடைக்கிறதா, தமிழ்நாடு ஃபேக்ட் செக்-ல் ஏதேனும் பதிவு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அதில், “இந்த தகவல் தவறானது. இந்த நபர் குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்ததால் அவரிடம் இருந்து கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டிருந்தது. சாதாரண பஸ்களில் கட்டணம் ரூ.75 தான். இந்த நபரிடம் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என்று மதுரை போக்குவரத்துக் கழக விருதுநகர் மண்டல உதவி மேலாளர் விளக்கம் அளித்துள்ளதாக பதிவிட்டிருந்தனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதில் இடம் பெற்றிருந்த பேருந்து பயணச் சீட்டில் ஏசி பஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை நாமும் பார்த்தோம். இதன் மூலம் திட்டமிட்டு வதந்தி பரப்பியிருப்பது தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மகளிர் உரிமைத் தொகையை வசூலிக்க மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது தி.மு.க அரசு என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க அரசு என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


