
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்குப் பதக்கம் மாற்றி அணிவிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் (+91 9049053770) எண்ணுக்கு ஒரு வீடியோவை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில், “Olympic Mistake Moment” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான போடியத்தில் நிற்கும் பெண்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்படுகின்றது. பதக்கம் அணிவிக்க வருபவர் வரிசையில் முதலில் நின்ற பெண்ணுக்கு அணிவிக்கிறார். அந்த பெண்மணியும் முதலில் தங்கப் பதக்கம் வென்றவருக்குத்தானே அணிவிப்பார்கள் என்று யோசிக்காமல், மகிழ்ச்சியுடன் குனிந்து அதைப் பெற்றுக்கொள்கிறார்.
அதிர்ச்சி அடைந்த மற்ற வெற்றியாளர்கள், இந்த பதக்கம் உங்களுக்கு உரியது இல்லை கூறவே, சுதாரித்துக்கொண்ட பதக்கம் பெற்ற பெண், தன் கழுத்திலிருந்து எடுத்து, முதல் இடத்தைப் பிடித்த வீராங்கனைக்கு அணிவிக்கிறார். அதைத் தொடர்ந்து மற்றவர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கப்படுகின்றன.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
ஃபேஸ்புக்கில் இந்த வீடியோ பகிரப்படுகிறதா என்று பார்த்தோம். Tamil HD Movies என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Jahir Hussain என்பவர் 2021 ஜூலை 29ம் தேதி பகிர்ந்திருந்தார். நிலைத் தகவலில், “பார்க்க அழகா இருந்தவருக்கு தங்க மெடலை அணிவித்து விட்டார்… 👉இதான் சாக்குன்னு ரெண்டு ஹக் hug வேற…” என்று குறிப்பிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் மாற்றி அணிவிக்கப்பட்டதா எந்த செய்தியும் வெளியாகவில்லை. எனவே, சந்தேகத்தின் பெயரில் இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வை நடத்தினோம்.
வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, உண்மை வீடியோ மற்றும் செய்திகள் நமக்கு கிடைத்தன. இந்த வீடியோ 2019ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது நமக்கு தெரியவந்தது. அதில், ISU Grand Prix 2019 என்ற ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கங்கள் மாறியது என்று குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடிய போது alamy.com என்ற புகைப்பட விற்பனை இணையதளத்தில் இந்த படங்கள் இருப்பதை காண முடிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ தற்போது 2021ம் ஆண்டு டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியிலோ, இதற்கு முன்பு 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலோ எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. ஒலிம்பிக் போட்டியின் போது பதக்கங்கள் மாற்றி வழங்கப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

அசல் பதிவைக் காண: alamy.com I Archive
முடிவு:
ஒலிம்பிக்ஸ் போட்டியில் வீராங்கனைகளுக்கு பதக்கம் மாற்றி வழங்கப்பட்டது என்று பரவும் வீடியோ 2019ம் ஆண்டு நடந்த ஸ்கேட்டிங் போட்டியின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் மாற்றி அணிவிக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
