குஜராத்தின் வந்தே பாரத் ஆம்புலன்ஸ் வளர்ச்சி என்று நோயாளியைத் தொட்டிலில் கட்டி தூக்கிச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நோயாளியை தொட்டிலில் சுமந்து செல்லும் வீடியோ மற்றும் வானதி ஶ்ரீனிவாசன் தொடர்பான நியூஸ் கார்டை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், "குஜராத் மாநிலம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை 2022 தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து" என்று இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

நிலைத் தகவலில், "குஜராத் வந்தே பாரத் ஆம்புலன்ஸ் வளர்ச்சி.. வளர்ச்சி.. வளர்ச்சி..🤣" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "ஜராத் மாடல்😭 புதிய ஆம்புலன்ஸ் அவசர என் 56இன்ச்" என்று குறிப்பிட்டு வேறு சிலரும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தனர்.

உண்மை அறிவோம்:

நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது அந்த மாநிலம் வளர்ச்சி கண்டது என்றும், அதை குஜராத் மாடல் என்று பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர். குஜராத் மாடல் என்பது எல்லாம் உண்மையில்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். குஜராத்தில் நோயாளிகளுக்கு சரியான ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை என்று குஜராத் மாடலை விமர்சித்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ உண்மையில் குஜராத்தில் எடுக்கப்பட்டது தானா என்று அறிய நாம் ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவுடன் ஜீ நியூஸ் 2022 டிசம்பர் 10ம் தேதி வெளியிட்ட இந்தி செய்தி நமக்கு கிடைத்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், "ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்சில் ஆடு மேய்க்கும் போது விபத்தில் நாக்கு துண்டான நபரை ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து வந்த கிராம மக்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: zeenews.india.com I Archive 1 I latestly.com I Archive 2

அதன் அடிப்படையில் கூகுளில் சாஹிப்கஞ்ச், தொட்டிலில் நோயாளி என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது சில ஊடகங்களில் இந்த வீடியோவுடன் செய்தி வெளியாகி இருப்பதை காண முடிந்தது. அனைத்திலும் இந்த வீடியோ ஜார்கண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நோயாளிகளை தொட்டிலில் கட்டி தூக்கிச் செல்லும் நிகழ்வு தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழல் தமிழ்நாட்டிலும் உள்ளது. இதை வைத்து ஒரு மாநிலத்தில் மருத்துவ சேவை வளர்ச்சி பெறவே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. குஜராத் அல்லது தமிழ்நாடு மருத்துவ வளர்ச்சி எப்படி உள்ளது என்றும் நாம் ஆய்வு செய்யவில்லை என்பதால் அந்த விவகாரத்துக்குள் நாம் செல்லவில்லை.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ ஜார்கண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குஜராத்தின் வந்தே பாரத் ஆம்புலன்ஸ் என்று பரவும் வீடியோ தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குஜராத்தில் நோயாளிகளை தொட்டிலில் தூக்கி வரும் நிலை உள்ளது என்று பரவும் வீடியோ உண்மையில் ஜார்கண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தொட்டிலில் நோயாளியை மருத்துவமனை கொண்டு செல்லும் வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: MISLEADING