நிர்வாண சாமியாரை தரிசிக்க மனைவியுடன் சென்றாரா ஓ.பி.ரவீந்திரநாத்?
நிர்வாண சாமியாரை தரிசிக்க தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்ற ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
தலைகுனிந்தபடி சாமியார் ஒருவரிடம் ஆசி வாங்கும் நபர் படத்தை பகிர்ந்துள்ளனர். அருகிலுள்ள பெண்மணி முகத்தை கைகளால் மூடிக்கொண்டபடி உள்ளார். நிலைத்தகவலில், "நிர்வாண சாமியாரை தரிசிக்க தன் மனைவியை கூட அழைத்து சென்ற OPS மகன் OP ரவீந்திரநாத் MP கண்ணை மூடிக்கொண்ட ரவீந்திர நாத்து பொண்டாட்டி" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Jagadeesan Ramalingam என்பவர் 9 மார்ச் 2010 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தில் உள்ளவரை பார்க்கும்போது தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் போல் உள்ளது. ஆனால், தலைகுனிந்து கைகூப்பிய நிலையில் உள்ளதால் அது ரவீந்திரநாத் தானா என்று உறுதியாக கூற முடியவில்லை. அதே போல் மனைவி என்று குறிப்பிடப்பட்டுள்ளவர் தன் முகத்தை கைகளால் முழுவதுமாக மூடியபடி உள்ளார். அதனால் ரவீந்திரநாத் குமாரின் மனைவியுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் முடியாத நிலை.
எனவே, இந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஓ.பி.ரவீந்திரநாத் என்று கூறி பலரும் இந்த படத்தை சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது. அவற்றுக்கிடையே, கன்னடத்தில் வெளியான ஒரு செய்தி கிடைத்தது.
Search Link |
கன்னடத்தில் வெளியான செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், ஷிமோகா எம்.எல்.ஏ-வும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஷிமோகா தொகுதியில் மீண்டும் போட்டியிடுபவருமான கேபி பிரசன்ன குமார், தன்னுடைய மனைவியுடன் நாக சாதுவை சந்தித்து ஆசி பெற்றார் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தி, கன்னடா ஒன் இந்தியாவில் 2018 ஏப்ரல் 19ம் தேதி வெளியாகி இருந்தது.
kannada.oneindia.com | Archived Link |
கர்நாடகாவில் உள்ள பத்திரிகையாளரிடம் இந்த செய்தி லிங்கை அனுப்பி கேட்டபோது, படத்தில் உள்ளவர் முகம் சரியாகத் தெரியவில்லை. செய்தியில் இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரசன்ன குமார் என்றே குறிப்பிட்டுள்ளனர். அந்த தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். அவருடைய ஃபேஸ்புக் லிங்க் அனுப்புகிறோம் என்றனர்.
அவருடைய ஃபேஸ்புக் லிங்கை திறந்து பார்த்தபோது, படத்தில் உள்ளது அவர் போலத்தான் தெரிகிறது. அதேபோல், ஓ.பி.ரவீந்திரநாத் மனைவியின் படம் கிடைக்கிறதா என்று தேடினோம். தி வீக் வெளியிட்ட படம் ஒன்று கிடைத்தது. அதில் ஓ.பி.ரவீந்திநாத் மனைவி ஆனந்தி என்று குறிப்பிட்டிருந்தனர். அவருடைய தலை நெற்றியும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டவர் நெற்றிப் பகுதியிலும் வித்தியாசம் தெரிகிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள பெண்மணி தன் கைகளால் முகத்தை நன்றாக மூடிக்கொண்டதால் சரியான ஒப்பீடு நம்மால் செய்ய முடியவில்லை.
theweek.in | Archived Link |
நம்முடைய ஆய்வில், இந்த படம் 2018ம் ஆண்டு கன்னடா ஒன் இந்தியா வெளியிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில், ஷிமோகா எம்.எல்.ஏ-வும் மீண்டும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருமான பிரசன்ன குமார் நாக சாதுவிடம் ஆசி பெற்றார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் படத்தில் உள்ளது ஓ.பி.ரவீந்திநாத் குமார் இல்லை என்று உறுதி செய்யப்படுவதுடன், ரவீந்திரநாத் குமார் நிர்வாண சாமியாரிடம் ஆசி பெற தன் மனைவியுடன் சென்றார் என்ற தகவல் தவறானது என்றும் உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:நிர்வாண சாமியாரை தரிசிக்க மனைவியுடன் சென்றாரா ஓ.பி.ரவீந்திரநாத்?
Fact Check By: Chendur PandianResult: False