FACT CHECK: காந்தியை சுட்டுக் கொன்றவர் தேசபக்தர் என்று கமல் கூறவில்லை!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

“தேசபக்தி கொண்ட இந்தியரால் காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று கமல் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “தேசபக்தி கொண்ட இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன் புது விளக்கம்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Manoharan Karthik என்பவர் 2021 பிப்ரவரி 1 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கோட்சே விவகாரம் தொடர்பாக 2019 தேர்தல் பிரசாரத்தில் கமல் பேசியது பிரச்னையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கோட்சேவை ஆதரித்து கமல் கருத்து கூறியதாக பதிவு பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

“தேசபக்தி கொண்ட இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்” என்பதை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது “தேசபக்தி கொண்டவர் என சொல்லிக்கொள்ளப்படும் இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன்” என்று இருந்தது. ஆனால், தினகரன் உள்ளிட்ட சில ஊடகங்களில் “தேச தந்தை மகாத்மா காந்தி தேசபக்தி கொண்ட இந்தியரால் இதே நாளில் கொல்லப்பட்டார்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்!” என்றே இருந்தது.

அசல் பதிவைக் காண: oneindia.com I Archive 1 I dinakaran.com I Archive 2

உண்மையில் இந்த தவறான தலைப்பை ஒன் இந்தியா வைத்துவிட்டு பின்னர் மாற்றிக் கொண்டதா என்பதை தெரிந்துகொள்ள அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு செய்தோம். அதில், முதலில், “தேசபக்தி கொண்ட இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன் புது விளக்கம்” என்று தலைப்பிட்டிருந்ததும் உண்மை உணர்ந்த பிறகு அதை மாற்றியிருப்பதும் தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

உண்மையில் கமல்ஹாசன் என்ன சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள அவருடைய ட்வீட்டை பார்த்தோம். ஆங்கிலத்தில் அவர் ட்வீட் இருந்ததால் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தினகரன் உள்ளிட்ட ஊடகங்கள் தவறான தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது.

அவருடைய ட்வீடில், “இந்த சீர்த்திருத்தப்பட்ட உலகில் மிகக் கீழான மற்றும் சராசரி விமர்சன வடிவமாக கொலை உள்ளது. உலக அமைதி தூதர்களில் முக்கியமான ஒருவரும் என்னுடைய தனிப்பட்ட வழிகாட்டியுமானவர் இந்த நாளில்தான் தேசபக்தர் என்று கூறிக்கொள்ளும் நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். வரலாறு மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக இந்தியா காந்திஜியை நினைவில் கொள்கிறது” என்று கூறியிருந்தார். 

Archive

கமல்ஹாசன் allegedly என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். அதாவது கூறப்படுகிற, கூறிக்கொள்கிற என்று அர்த்தமாகிறது. இதன் மூலம், கமல்ஹாசன் வெளியிட்ட ஆங்கில ட்வீட் அர்த்தம் புரியாமல் ஊடகங்கள் தவறு செய்திருப்பதும், அது புரியாமல் பலரும் இந்த தவறான தகவலை பகிர்ந்து வருவதும் உறுதியாகிறது. 

முடிவு:

காந்தியைக் கொன்றவர் தேசபக்தர் என்பது போல கமல் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:காந்தியை சுட்டுக் கொன்றவர் தேசபக்தர் என்று கமல் கூறவில்லை!

Fact Check By: Chendur Pandian 

Result: False