சர்ச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சினிமா ஸ்டன்ட் இயக்குநர் கனல் கண்ணன் வழக்கினை நடத்த அவரது குடும்பத்துக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், இந்து சொந்தங்களுக்கு வேண்டுகோள். இந்து சொந்தங்களே நம்முடைய காரியகர்தா கனல் கண்ணன் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கினை நடத்துவதற்கும் அவரது குடும்ப செலவிற்கும் தேவையான நிதியுதவியை இந்துக்கள் வழங்க வேண்டும் - ராஜவேல் நாகராஜன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Dr.பூங்குழலி என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சினிமா ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி வருபவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பில் பொறுப்பாளராக உள்ளார். கிறிஸ்தவ மத போதகர் பற்றி வீடியோ வெளியிட்டதாக சமீபத்தில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் மீதான வழக்கை நடத்த, அவரது குடும்பத்துக்கு உதவ இந்துக்கள் நிதி உதவி செய்ய வேண்டும் என்று ராஜவேலு என்பவர் கோரிக்கை விடுத்ததாக நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.

இந்த நியூஸ் கார்டின் வடிவமைப்பு, தமிழ் ஃபாண்ட் எல்லாம் வித்தியாசமாக இருக்கவே, இந்த நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஊடகமே இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தெளிவுபடுத்திவிட்ட சூழலில் மேற்கொண்டு ஆய்வு செய்யத் தேவை எழவில்லை. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கனல் கண்ணனுக்கு இந்துக்கள் நிதி உதவி செய்ய வேண்டும் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கனல் கண்ணன் மீதான வழக்கை நடத்த நிதி உதவி கோரப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: False