ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உதவ மத்திய அரசு ரூ.30,628 வழங்க உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர், இணையதளம் ஒன்றின் லிங்க்கை நமக்கு அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த லிங்க்கை திறந்து பார்க்கும் போது, பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.30,628ஐ மத்திய நிதியமைச்சகம் வழங்க உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உதவியை பெற பதிவு செய்யும்படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கமெண்ட் பகுதியில் பலரும் தங்களுக்கு பணம் கிடைத்துவிட்டது என்று பதிவிட்டிருந்தனர். அதிலும் ஒருவர், தன்னுடைய காதலிக்கு பணம் கிடைத்துவிட்டது. எனக்கு ஏன் இன்னும் கிடைக்கவில்லை என்று எல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I indiangotrs.blogspot.com I Archive 2

ஃபேஸ்புக்கில் இதை யாரும் பகிர்ந்து வருகிறார்களா என்று பார்த்தோம். அப்போது, வங்கி கணக்கு இருந்தால் பணம் என்று ஒரு பதிவு நமக்கு கிடைத்தது. அதில், "ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உதவ, மத்திய அரசு ரூ.30,628 வழங்க அதிரடி உத்தரவு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Mansoorali என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 12ம் தேதி பதிவிட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:

வாசகர் நமக்கு அனுப்பிய இணையதளம் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. ரூ.30 ஆயிரம் வங்கிக் கணக்கு வரும் என்றால், அதை அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கும். ரகசியமாக இதை வெளியிட வேண்டியது இல்லை. இப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட இல்லை என்பதால், இந்த இணைய தளம் மீது சந்தேகம் எழுந்தது.

உண்மையில் இப்படி ஏதும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளதா, அல்லது இப்படி பரவும் தகவல் பற்றி எச்சரிக்கை ஏதும் வெளியிட்டுள்ளதா என்று ஆய்வு செய்தோம். முதலில் இந்த இணைய தளத்தில் என்ன தகவல் கேட்கிறார்கள் என்று பார்த்தோம். நம்முடைய பெயரை கேட்கின்றனர். பெயரை பதிவு செய்ததும், நீங்கள் ரூ.30,628 பெற தகுதியானவர். இந்த தகவலை உங்கள் நண்பர்கள், வாட்ஸ் அப் குழுவில் பகிருங்கள் என்று வந்தது. அவர்கள் இதை பெற்றதும், சரி பார்ப்பு முடிந்ததும் பணத்தை பெறுவதற்கான ‘கோட்’ வரும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த இணைய தளம் நிதித் துறை அமைச்சகத்தின் இணைய தளம் இல்லை. Blogspot தளமாக இருந்தது. மத்திய நிதித்துறை அமைச்சகம் இப்படி blogspot தளத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த இணைய தளம் போலியானது என்பதை உறுதி செய்ய, கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம்.

அப்போது, “இத்திய அரசு இப்படி அறிவிப்பு அதையும் வெளியிடவில்லை. போலியான இணைய தளத்தை நம்ப வேண்டாம்” என்று மத்திய அரசின் பிஐபி வெளியிட்டிருந்த ட்வீட் பதிவு நமக்கு கிடைத்தது. அதில், இப்படி எந்த ஒரு நிதி உதவியையும் மத்திய நிதி அமைச்சகம் அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் மத்திய அரசு ரூ.30,628 வழங்குகிறது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியானது.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்த லிங்க்கை பார்த்தோம். லிங்க் யூடியூப் வீடியோ ஒன்றை ஓப்பன் செய்தது. அதில், மத்திய அரசு பணம் தரப்போகிறது என்ற வகையில் குறிப்பிட்டுவிட்டு, கடைசியில் இது போலியான தகவல் என்று கூறப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பேங்க் அக்கவுண்ட் இருந்தா 30000 ரூபாய் என்று வில்லங்கமாகக் குறிப்பிட்டிருப்பது தெரிந்தது.

முடிவு:

பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு ரூ.30,628ஐ மத்திய நிதி அமைச்சகம் வழங்குகிறது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.30,628 வழங்க மத்திய அரசு அதிரடி உத்தரவு என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False