
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
லெபனானில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துருக்கி 🇹🇷 சிரியா 🇸🇾 லெபனான் 🇱🇧 பூமி அதிர்ச்சியா அல்லது எதிரிகளின் சதியா ?
கீழே உள்ள விடியோ பாருங்க முதலில் அணு உலை வெடித்து சிதறியது. பிறகு தான் பூகம்பம் ஏற்பட்டு உள்ளது.
ஆகாய தாக்குதலின் பரிணாம வளர்ச்சியாக பூமியில் இருந்து தாக்குதல் தொடுக்க முன்னோட்டமா இந்த சம்பவம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ட்வீட் பதிவை தடா ஜெ ரஹிம் என்பவர் 2023 பிப்ரவரி 7ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2020ம் ஆண்டு லெபனான் நாட்டில் பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகத்தில் இருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவை பகிர்ந்து, துருக்கியில் முதலில் அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாகச் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தவறானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
இந்த வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டு பெய்ரூட் துறைமுக வெடிவிபத்து என்று குறிப்பிட்டு பல ஊடகங்கள் வெளியிட்ட வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. அந்த வீடியோ காட்சியும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் ஒன்று என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: tgcom24.mediaset.it I Archive 1 I mirror.co.uk I Archive 2
லெபனானின் பெய்ரூட்டில் கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடிவிபத்து வீடியோவை, துருக்கியில் உள்ள அணுஉலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
முடிவு:
துருக்கியில் அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்தே நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் கூறி 2020ம் ஆண்டு லெபனான் வெடிபொருட்கள் வெடிப்பு வீடியோவை தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அணு உலை வெடிப்பால் துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
