
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல ஆயிரம் பேர் உயிரிழந்த சூழலில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட நபருக்கு அருகில் நாய் கவலையுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே யாரோ ஒருவர் சிக்கிக்கொண்டது போன்றும் அவருக்கு அருகே நாய் அமர்ந்திருப்பது போலவும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துருக்கியின் துயரம்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Ramana Ragu என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 7ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
துருக்கி, சிரியா பகுதியில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இந்த சூழலில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய ஒருவருக்கு அருகில் நாய் ஒன்று அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் 2023 துருக்கி நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக பல செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. மேலும், இந்த புகைப்படத்தைப் பல புகைப்படங்கள் விற்பனை செய்யும் இணையதளங்கள் விற்பனைக்காக வைத்திருப்பதும் தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: stock.adobe.com I Archive 1 I depositphotos.com I Archive 2 I alamy.com I Archive 3
adobe.com இணையதளத்தில் இந்த புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படத்தை Noska Photo என்ற ஐடி கொண்டவர் எடுத்தது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை. depositphotos.com என்ற இணையதளத்திலும் இந்த புகைப்படம் இருந்தது. அதிலும் இந்த புகைப்படம் பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை.
alamy.com இணையதளத்தில் ஓரளவுக்குத் தகவல் இருந்தது. இந்த புகைப்படமானது 2018ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த தேதியில் துருக்கியில் நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டதா என்று தேடினோம். 2018 செப்டம்பரில் இந்தோனேஷியாவிலும் நவம்பரில் அமெரிக்காவின் அலஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் கிடைத்தன. அக்டோபரில், குறிப்பாக அக்டோபர் 18, 2018ல் உலகம் முழுக்க பதிவான நிலநடுக்கம், அதிர்வு பற்றிய தகவல் கிடைத்தது. அந்த குறிப்பிட்ட தேதியில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படம் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. துருக்கி நிலநடுக்கம் 2023 பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்டது. இதனால், இந்த புகைப்படம் துருக்கி நிலநடுக்க பாதிப்பு புகைப்படம் இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
துருக்கி நிலநடுக்கத்தின் காட்சி என்று பகிரப்படும் படம் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நிலநடுக்கத்தில் சிக்கியவரை காக்கப் போராடும் நாய் புகைப்படம் துருக்கியில் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
