பாலஸ்தீன கொடியுடன் போஸ் கொடுத்தாரா மைக் டைசன்?

சர்வதேசம் | International

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், பாலஸ்தீன கொடியுடன் போஸ் கொடுத்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் கொடியை பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் போர்த்தியிருக்கும் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில். Lion is Always Lion! குத்துச்சண்டை போட்டயில் மைக் டைசன் 6 பாயிண்ட் வித்தியாசத்தில் தோல்வி! 58 வயசுல 27 வயசு பையன் கூட 8 ரவுண்டு மோதியது அருமை!! தோற்றாலும் 2 கோடி டாலர்களை வென்றார் Mike Tyson” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனை 28 வயதான ஜேக் பால் சமீபத்தில் நடந்த போட்டியில் வீழ்த்தி வெற்றி பெற்றார். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அந்த தகவலில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், மைக் டைசன் பாலஸ்தீன கொடியுடன் இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். மைக் டைசன் இப்படி போஸ் கொடுத்ததாக எந்த செய்தியும் இல்லை. எனவே, இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

மைக் டைசன் பாலஸ்தீன கொடியுடன் போஸ் கொடுத்துள்ளாரா அல்லது புகைப்படம் ஏதும் வெளியிட்டுள்ளாரா என்று அறிய கூகுளில் மைக் டைசன், பாலஸ்தீன கொடி என்பது உள்ளிட்ட சில அடிப்படை வார்த்தைகளைப் பயப்படுத்தி தேடினோம். ஆனால் நமக்கு அப்படி எந்த புகைப்படமும் கிடைக்கவில்லை.

கடைசியாக நவம்பர் 16, 2024 அன்று நடந்த போட்டியின் காணொளியைப் பார்த்தோம். அதிலும் கூட அவர் பாலஸ்தீனத்தின் கொடியை போர்த்தியபடி வரவில்லை. அவர் அப்படி வந்திருந்தால் அதுவே பெரிய செய்தியாகி இருக்கும். 

இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போதும் இந்த புகைப்படத்தை எந்த ஊடகமும் வெளியிட்டதாக எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை இது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், truemedia.org இணையதளத்தில் இந்த புகைப்படத்தைப் பதிவேற்றித் தேடினோம். அதில், இந்த புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று உறுதி செய்தது. 

உண்மைப் பதிவைக் காண: detect.truemedia.org I Archive

இந்த புகைப்படம் தொடர்பாக தொடர்ந்து தேடிய போது அமெரிக்காவைச் சார்ந்த ஃபேக்ட் செக் ஊடகமான usatoday.com இது தொடர்பாக கட்டுரை வெளியிட்டிருப்பது தெரிந்தது. அவர்கள் மைக் டைசன் சார்பாக, ஜோ மிக்னாக்னோ (Jo Mignano) என்பவரைத் தொடர்புகொண்டு கேட்டதாகவும் அதற்கு அவர் இந்த புகைப்படம் உண்மையானது அல்ல, எடிட் செய்யப்பட்டது, என்று உறுதி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

பாலஸ்தீன கொடியை போர்த்தியபடி போஸ் கொடுத்த மைக் டைசன் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பாலஸ்தீன கொடியுடன் போஸ் கொடுத்தாரா மைக் டைசன்?

Written By: Chendur Pandian  

Result: False