FACT CHECK: பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்த இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று பரவும் வதந்தி!

சமூக ஊடகம் சர்வதேசம்

பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்தது தொடர்பாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட செச்சனிய இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive I Facebook 2 I Archive 2

ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டிருக்கும் இறுதிச் சடங்கு வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரான்ஸ் நாட்டில #நபி_ஸல்லல்லாஹு_அலைஹிவஸல்லம் அவர்களை இழிவு படுத்திய ஆசிரியர், சாமுவேலை கொலை செய்த செசன்யா நாட்டு இளைஞர் அங்குள்ள காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார் ! அவரின் ஜனாசா செசன்யா நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது ! விடைபெற்றார், ஷஹீதான அந்த இளைஞர் ! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூறப்பட்டுள்ளது.

வீடியோவை AS-Seyyed Ashar Goush Mowlana என்பவர் 2020 நவம்பர் 4ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி தொடர்பான கேலிச் சித்திரத்தைக் காட்டினார் என்பதற்காக பிரான்சில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை செய்த ரஷ்யாவின் செச்செனியா பகுதியிலிருந்து அகதியாக பிரான்சுக்கு வந்த அப்துல்லாக் அயூயெடோவிச் அன்சோரோவ் என்ற இளைஞரை பிரான்ஸ் போலீசார் சுட்டுக் கொன்றனர். அவருடைய சொந்த ஊரில் நடந்த இறுதிச் சடங்கில் பல ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அவருடைய பெற்றோர் 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரான்சுக்கு அகதிகளாக வந்துவிட்டார்கள் என்று செய்திகளில் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பியிருப்பார்களா என்ற கேள்வி எழுந்தது.

அசல் பதிவைக் காண: dailysabah.com I Archive 1 I alkhaleejtoday.co I Archive 2

செச்சன்யா என்பது ரஷ்ய நாட்டின் கீழ் உள்ள ஒரு பகுதியாகும். பிரான்சில் இருந்து உடல் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக செய்தி ஏதும் கிடைக்கிறதா என்று தேடினோம். நம்முடைய தேடலில் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அப்துல்லாக் அயூயெடோவிச் அன்சோரோவுக்கு இறுதிச் சடங்கு நடந்தது தொடர்பாக எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

எனவே, இந்த வீடியோ தகவலை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். வீடியோவை InVid & WeVerifyஐ பயன்படுத்தி புகைப்பட ஃபிரேம்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டோம். கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல், யென்டெக்ஸ் இமேஜ் தேடல் என பல சர்ச் இன்ஜின்களைப் பயன்படுத்தித் தேடினோம்.

அசல் பதிவைக் காண: eng.kavkaz-uzel.eu I Archive 1 I oc-media.orgI Archive 2

அப்போது இந்த வீடியோ 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக செய்திகள் மற்றும் வீடியோக்கள் கிடைத்தன. அவற்றைப் பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அதே மசூதி காட்டப்படுகிறது. நாம் புகைப்படமாக மாற்றி தேடிய ஃபிரேம் 2018ல் வெளியான ஒரு செய்தியில் இடம் பெற்றிருந்தது. அதில், யூசுப் டெமிர்கானோவ் செச்செனியாவில் அடக்கம் செய்யப்பட்டார் என்று இருந்தது.

ரஷ்ய ராணுவ அதிகாரி யூரி புடனோவ் என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது சிறை தண்டனை அனுபவித்து வந்தார் யூசுப் டெமிர்கானோ. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்ததாகவும், இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

Youtube 1 I Youtube 2 I Youtube 3 I Youtube 4

அவரது உடலை மசூதிக்குள் எடுத்துச் செல்லும் பல வீடியோக்கள் கிடைத்தன. ஆனால், உள்ளே இருந்து வெளியே எடுத்து வரும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ளது போன்ற வீடியோவை கண்டுபிடிப்பது சிரமாக இருந்தது.

அந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவருமே அந்த நிகழ்வை வீடியோ எடுப்பதைக் காண முடிகிறது. பலரும் அந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தனர். இதில் யார் பதிவிட்ட வீடியோவை எடுத்து தற்போதைய பிரான்ஸ் நிகழ்வுடன் தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள் என்பது கண்டறிவது கடினமாக இருந்தது.

அதே நேரத்தில் ரஷ்ய ஊடகத்தில் வெளியான புகைப்படமும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ காட்சியும் ஒத்துப் போகிறது. இதன் மூலம் இது 2018ம் ஆண்டு செச்செனியாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று உறுதியாகிறது.

நம்முடைய ஆய்வில்,

பிரான்ஸ் ஆசிரியர் தலையை வெட்டிக் கொன்ற நபர் ரஷ்யாவின் செச்செனியாவில் இருந்து பிரான்சுக்கு அகதியாக வந்த நபரின் இறுதிச் சடங்கு பற்றி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ காட்சி 2018ல் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.

இதன் அடிப்படையில், பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்தவரின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர் என்று இரண்டு ஆண்டுகள் பழமையான வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் இது தவறான தகவல் என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்த இளைஞரின் இறுதி ஊர்வல வீடியோ என்று 2 ஆண்டு பழைய வீடியோவை தற்போது பலரும் பகிர்ந்து வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்த இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False