FactCheck: மெக்காவில் வெளிப்பட்ட கரப்பான் பூச்சிகள்; இஸ்லாம் மதம் அழியப் போகிறதா?
மெக்காவில் இஸ்லாமியர்கள் மீது கரப்பான்பூச்சி ஏறியதாகவும் அதனால் இஸ்லாம் மதமே அழியப்போகிறது என்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் இடத்தில் ஏராளமான பூச்சிகள் இருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "கரப்பான் என்று முஸ்லிம் உடம்பில் ஏறுகிறதோ ! அன்று முஸ்லிம் இனமே முஸ்லிம் நாடே அழியும் ! என்று முஸ்லிம்களின் திருக் குரானில் உள்ளது என்று கூறுவார்கள்.
மெக்கா நகர் ல் ரம்ஜான் கூட்டத்தில் கூட்டம் கூட்டமாக கரப்பான் உடம்பில் ஏறி விட்ட காட்சிகள் !!! . உலகமெங்கும் உள்ள இந்த மதவெறி கும்பல் இப்போது புலம்ப துவங்கி உள்ளது !!! ஆகையால் இந்திய திருநாட்டில் வாலறுந்த நரிகள் இப்போது தாய் மதம் ல் இணைந்து கொள்ளலாம் என்று நினைக்க துவங்கி உள்ளார்கள் " என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை Arun Kumar Devasthanam என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 16ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
கரப்பான் பூச்சி ஒன்றும் மிகவும் அரிதான உயிரினம் இல்லை. எல்லா வீடுகளிலும் கரப்பான் பூச்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. வீட்டுக்குள் இல்லை என்றாலும் கழிவறை, செப்டிக் டேங்க் போன்ற பகுதிகளில் அவை இருந்துகொண்டு, அவ்வப்போது வீட்டுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும். ஆனால் கரப்பான் பூச்சிக்கு பயந்து மதம் மாற இந்திய இஸ்லாமியர்கள் யோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், கரப்பான் பூச்சி இஸ்லாமியர் ஒருவர் மீது ஏறினாலே இஸ்லாம் மதம் அழிந்துவிடும் என்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதன் படி மெக்காவில் இஸ்லாமியர்கள் மீது கரப்பான் பூச்சி ஏறியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு கதை எழுதியவர்களுக்குக் குரானில் எந்த இடத்தில் இந்த தகவல் உள்ளது என்று கூறமுடியவில்லை. உண்மையில் குரானில் அப்படிக் கூறியிருந்தால் கரப்பான் பூச்சிகள் தொடர்பில் இஸ்லாமியர்கள் இன்னும் அதிக எச்சரிக்கையுடன் இருந்திருப்பார்கள். எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில், குரானில் கரப்பான் பூச்சி ஏறுவது பற்றி ஏதும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று சில கீ வார்த்தைகளை டைப் செய்து கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, சென்னை பெரம்பூரில் உள்ள ஜமாலியா இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் ((IFT))நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு இது பற்றிக் கேட்டோம். அவர்களுக்கு சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ மற்றும் பதிவையும் அனுப்பினோம்.
வீடியோ பதிவை பார்த்துவிட்டு நம்மிடம் பேசிய நிர்வாகி, கரப்பான் பூச்சி இஸ்லாமியர் மீது ஏறினால் இஸ்லாமிய இனம் மற்றும் இஸ்லாமிய நாடுகள் அழியும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. குரானை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான முறையில் விளக்கங்கள் அளிப்பவர்கள் நாங்கள். குரானில் எந்த இடத்திலும் இப்படி இல்லை. மேலும், மக்காவில் ரம்ஜான் பண்டிகையின் போது கரப்பான் பூச்சிகள் வந்ததாக எந்த செய்தியும் இல்லை. இது வெறும் வதந்திதான்" என்றார்.
அடுத்ததாக இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது தெரிந்தது. ஆனால், எந்த ஒரு செய்தி ஊடகமோ, சௌதி அரேபிய அரசோ, மெக்கா மசூதி நிர்வாகமோ சமீபத்தில் கரப்பான் பூச்சி தாக்குதல் நடந்ததாக செய்தி, தகவலை வெளியிடவில்லை.
உண்மைப் பதிவைக் காண: express.co.uk I Archive 1 I geo.tv I Archive 2 I newsweek.com I Archive 3
கூகுளில் மெக்கா, கரப்பான் பூச்சி என்று சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, 2019, 20-ல் மெக்காவில் மிகப்பெரிய அளவில் வெட்டுக்கிளி தாக்குதல் நடந்தது என்று செய்திகள் கிடைத்தன. மேலும் 2019 ஜனவரி 8ம் தேதி மெக்கா நகராட்சி சார்பில் வெளியான ட்வீட் பதிவும் நமக்கு கிடைத்தது. அதில் மெக்காவின் பெரிய மசூதியில் கிடக்கும் வெட்டுக்கிளிகளை அப்புறப்படுத்தும் புகைப்படங்கள் இருந்தன.
இது தொடர்பாக 2019 ஜனவரி 10ம் தேதி வெளியான செய்தியில் மெக்காவில் வசிக்கும் ஒருவரின் பேட்டி இடம் பெற்றிருந்தது. அதில், "சனிக்கிழமை இரவு தொழுகையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது எங்கிருந்தோ ஆயிரக் கணக்கில் வெட்டுக்கிளிகள் வந்தன. எங்கு பார்த்தாலும் வெட்டுக்கிளிகளாகத்தான் இருந்தன. மெக்கா நகரில் வசித்து வரும் நான், இது வரை இப்படியான வெட்டுக்கிளி தாக்குதலைப் பார்த்தது இல்லை" என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ தொடர்பாக இஸ்லாம் தொடர்பான இணையதளத்தில் வெளியான ஃபேக்ட் செக் கட்டுரையும் நமக்கு கிடைத்தது. அதில் இந்த தகவல் தவறானது என்று விளங்கங்களுடன் குறிப்பிட்டிருந்தனர்.
2023ல் மெக்காவில் வெட்டுக்கிளி தாக்குதல் நடந்ததாக எந்த செய்தியும் இல்லை. 2019ம் ஆண்டு இப்படி நடந்ததாக செய்தி மற்றும் வீடியோக்கள் நமக்குக் கிடைத்துள்ளன. மேலும் இவை கரப்பான் பூச்சி இல்லை, கருப்பு நிற வெட்டுக்கிளி என்று செய்திகள் கூறுகின்றன.
இஸ்லாமியர் மீது கரப்பான்பூச்சி ஏறினால் இஸ்லாம் அழிந்துவிடும் என்று குரானில் கூறப்படவில்லை என்று இஸ்லாமிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மக்காவின் பெரிய மசூதியில் கரப்பான்பூச்சிகள் வெளிப்பாட்டு இஸ்லாமியர்கள் மீது ஏறியதாகவும் அதனால் இஸ்லாம் அழியப்போகிறது என்று சமூக ஊடகங்களில் பரவும் பதிவு வெறும் வதந்திதான் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:FactCheck: மெக்காவில் வெளிப்பட்ட கரப்பான் பூச்சிகள்; இஸ்லாம் மதம் அழியப் போகிறதா?
Fact Check By: Chendur PandianResult: False