
ராமநாதபுரத்தில் உள்ள ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி தந்த கோவில் தற்போது கிறிஸ்தவ ஆலயமாக மாற்றப்பட்டுவிட்டது என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ் இந்து கோவில் போல் தோற்றம் அளிக்கும் ஆனால் சிலுவை சின்னம் உள்ள கோவிலின் புகைப்படத்தின் மீது போட்டோ எடிட் முறையில் எழுதப்பட்டுள்ளது. அதில், “நன்றாக உறங்குவோம் இந்துக்களே. ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்த அதியமானின் கோயில் இப்போது சர்ச் ஆகி மாற்றப்பட்டுள்ள. இடம்: இராமநாதபுரம் அருகே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட பதிவை சிவமயம் Anbudan Selvan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஏப்ரல் 11 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தார் என்று தமிழ் இலக்கியம் சொல்கிறது. இது தமிழ் இலக்கியத்தில் உள்ள நிகழ்வுதான். இதற்கு கோவில் கட்டியுள்ளார்களா என்று ஆச்சரியமாக இருந்தது. மேலும், அதியமான் ஆட்சி செய்தது தகடூர் என்று அழைக்கப்பட்ட இன்றைய தருமபுரி பகுதி என்று தமிழறிஞர்கள் கூறுகின்றனர். அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்திருந்தால் அது தருமபுரி பகுதியில் கொடுத்திருக்க வேண்டும். எனவே, இந்த கோவில் பற்றிய செய்தி சந்தேகத்தை ஏற்படுத்தியது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள கோபுரத்தில் சிலுவை மட்டுமே உள்ளது. வேறு எந்த சிலையும் இல்லை. எனவே, இதுவும் கிறிஸ்தவர்கள் இந்து கோவில் போல் கட்டிய கிறிஸ்தவ ஆலயமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
இந்த கோவில் எங்கு உள்ளது என்று தெளிவாக குறிப்பிடவில்லை. ராமநாதபுரம் அருகே என்று மொட்டையாக குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவு பெரிய ராமநாதபுர மாவட்டத்தில் எங்கு போய் தேடுவது… எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்து மக்கள் கட்சி உள்பட பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த பதிவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருப்பது தெரிந்தது. பல வட இந்திய இந்து அமைப்புக்களும் இந்து கோவிலை இப்படி மாற்றிவிட்டார்களே என்று கொந்தளித்திருந்தனர்.
ஆனால் இந்த கோவில் எங்கே உள்ளது என்று தெளிவாக குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் செயல்படும் இந்து மக்கள் கட்சியும் கூட இந்த கோவில் ராமநாதபுரத்தில் எந்த இடத்தில் உள்ளது, எப்போது இது கிறிஸ்தவ ஆலயமாக மாற்றப்பட்டது என்று எந்த ஒரு விவரத்தையும் வெளியிடவில்லை.
அதே நேரத்தில் அந்த பதிவுக்கு இந்து மக்கள் கட்சி அளித்திருந்த பதில் பதிவு ஒன்று கண்ணில் பட்டது. அதில், “நேற்று பழைய கோவில் ஒன்று கிறிஸ்தவ ஆலயமாக மாற்றப்பட்டதாக செய்தி கிடைத்தது. இது பற்றி ஆய்வு செய்தபோது அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த கிறிஸ்தவ ஆலயத்தை மிஷனரிகள் இந்து கோவில் போலவே கட்டியுள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும், திருப்பத்தூரில் உள்ள கிறிஸ்துகுல ஆசிரமத்தின் வீடியோ இணைப்பையும் வழங்கியிருந்தது.

அசல் பதிவைக் காண: twitter I Archive
நம்முடைய தேடலில் இந்த ஆலயம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள கிறிஸ்து குல ஆசிரமம் என்று தெரிந்தது. கூகுள் மேப்பில் இது தொடர்பான புகைப்படங்களும் நமக்குக் கிடைத்தன. அந்த புகைப்படங்களைப் பார்த்த போது கோவில் தூணில் எல்லாம் சிலுவை சின்னம் செதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. பழைய கோவிலை தேவாலயமாக மாற்றியிருந்தால் தூண்களில் உள்ள சிற்பங்களை அழித்திருக்க முடியாது.
அசல் பதிவைக் காண: Google Map I Archive
இந்த ஆசிரமத்தை இந்திய சுதேச மிசனெறிச் சங்கம் (The National Missionary Society Of India) என்ற அமைப்பு நடத்தி வருவது தெரிந்தது. இந்தியாவில் கிறிஸ்தவத்தை, இந்தியர்களிடமிருந்து பெற்ற நிதி உதவியைக் கொண்டு, இந்திய வழிமுறைகள் படி அறிவிப்பதுதான் நோக்கம் என்று குறிப்பிட்டிருந்தனர். இவர்களுக்கு குற்றாலம், திருப்பத்தூரில் கிறிஸ்துகுல ஆசிரமம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: nmsofindia.org I Archive
அந்த அமைப்பைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர், “இந்த ஆலயம் 1950க்கு முன்பு கட்டப்பட்டு விட்டது. நாங்கள் கட்டிய ஆலயம்தான், கோவிலை கிறிஸ்தவ ஆலயமாக மாற்றவில்லை. இது பற்றி பொதுச் செயலாளர் எஸ்.கிறிஸ்டோபர் விஜயனிடம் பேசினால் விளக்கம் அளிப்பார்” என்றனர். அவருடைய மொபைல் போன் நம்பரை வாங்கி அவரைத் தொடர்புகொண்டோம். நம்மிடம் பேசிய அவர், “தென்காசி, திருப்பத்தூர் மட்டுமல்ல இந்தியா முழுக்க நாங்கள் கட்டிய தேவாலயங்கள் எல்லாம் இந்த சாயலில்தான் இருக்கும். தற்போது ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியூர் சென்றுள்ளேன். தென்காசி தேவாலயம் கட்டப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் ஊருக்கு வந்ததும் தருகிறேன்” என்றார்.
நம்முடைய ஆய்வில், இது கோவிலாக இருந்தது இல்லை, தமிழக இந்து கோவில் போல கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயம் என்று உறுதியாகி உள்ளது. இது மாற்றம் செய்யப்பட்ட கோவில் இல்லை என்று இந்து மக்கள் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது நமக்குக் கிடைத்துள்ளது. கிறிஸ்தவத்தை இந்திய மக்களுக்கு இந்திய முறைப்படி பரப்பவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இந்திய சுதேச மிசனெறிச் சங்கம் தன்னுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்து கோவிலை கிறிஸ்தவ ஆலயமாக மாற்றிவிட்டதாகப் பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ராமநாதபுரத்தில் ஔவைக்கு அதியமான நெல்லிக்கனி கொடுத்த இடத்தில் இருந்த இந்து கோவிலை கிறிஸ்தவ சர்ச் ஆக மாற்றிவிட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி தந்த கோவில் கிறிஸ்தவ ஆலயமாக மாற்றப்பட்டதாக வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
