FactCheck: பசும்பொன்னில் நடந்தது பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தாரா?
‘’பசும்பொன்னில் திருநீற்றை கீழே கொட்டியது என்னுடைய கொள்கை,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, பகிரப்படும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் யாரேனும் இதனை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டு, புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்படுகிறது. அதில், மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை இணைத்து, அதில், ‘’பசும்பொன்னில் திருநீற்றை கீழே கொட்டியது என்னுடைய கொள்கை சம்பந்தப்பட்டது. அதற்கு யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை- மு.க.ஸ்டாலின்,’’ என எழுதப்பட்டுள்ளது.
இது பார்க்க உண்மை போலவே இருப்பதால், நாமும் முதலில் சற்று குழப்பத்திற்கு ஆளானோம். பிறகு, இதில் உள்ள ஃபாண்ட் மற்றும் தெளிவற்ற டெம்ப்ளேட் போன்றவற்றை வைத்துப் பார்த்தபோது, இது போலியாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்தது.
இதன்பேரில், 01.11.2020 அன்றைய தேதியில் புதிய தலைமுறை ஊடகம் இப்படி எதுவும் நியூஸ் கார்டு வெளியிட்டதா என, அவர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் (@PutiyaTalaimuraiMagazine) தகவல் தேடினோம். ஆனால், இப்படி எதுவும் காண கிடைக்கவில்லை.
மாறாக, ஸ்டாலின் பற்றி அவர்கள் வெளியிட்டிருந்த வேறு சில நியூஸ் கார்டுகள்தான் கிடைத்தன. அவற்றின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Puthiyathalaimurai FB Post Link 1 I Puthiyathalaimurai FB Post Link 2
எனவே, நாம் சந்தேகிக்கும் நியூஸ் கார்டு போலியானதுதான் என்ற எண்ணம் மேலும் வலுவடைய, நாம் இறுதியாக, ஒருமுறை புதிய தலைமுறை ஊடகம் தரப்பில் விளக்கம் பெற தீர்மானித்தோம்.
இதன்படி, புதிய தலைமுறை டிஜிட்டல் ஹெட் மனோஜை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். குறிப்பிட்ட நியூஸ் கார்டை பார்வையிட்ட அவர், ‘’இது தவறான தகவல். மு.க.ஸ்டாலின் பற்றி இப்படி நாங்கள் செய்தி வெளியிடவில்லை,’’ என்றார்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,
1) மு.க.ஸ்டாலின், பசும்பொன் சென்றபோது, திருநீறு வைக்காமல் அதனைக் கீழே கொட்டிவிட்டதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
2) இதன் பின்னணியில் குறிப்பிட்ட போலி நியூஸ் கார்டை சிலர் தயாரித்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் குறிப்பிட்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு உறுதி செய்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். அதுபற்றி நாங்கள் ஆய்வு செய்து உண்மை விவரம் வெளியிடுகிறோம்.
Title:பசும்பொன்னில் நடந்தது பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False