
குண்டூரில் நாகதெய்வ கோவிலை இஸ்லாமியர்கள் இடித்தார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நாகம், பிறை – நட்சத்திரம் உள்ள ஒரு சுவர் வளைவை இஸ்லாமியர்கள் இடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குண்டூரில் நடந்தது.😱 நாளை உங்கள் ஊரில். . . இது எள்ளுண்டி நா வுரியில் நடக்கிறது இந்த காணொளி சிறுபான்மையினர் பெரும்பான்மையாகவோ அல்லது சமூகத்தில் பலம் வாய்ந்தவர்களாகவோ மாறும் அபாயம்…
இந்த காணொளி எதிர்காலத்தில் நமது நிலையை காட்டுகிறது…. . இந்த வீடியோவுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நாக தெய்வம் கோவிலை வழக்கமாக வழிபடும் ஒரு குடும்பத்தின் கதறல் தான் இந்த வீடியோ. உண்மையைக் காட்டுவது தவறல்ல, உண்மையிலிருந்து தப்பிப்பது தவறு. மேலும், உண்மையைக் காட்டுவது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல…. உண்மையைக் காட்டுவதற்குக் காரணம், எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை ஹிந்து என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 அக்டோபர் 14ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இந்து கோவில் என்றோ, இடித்தது இஸ்லாமியர்கள் என்றோ நேரடியாக கூறவில்லை. அதே நேரத்தில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக மாறும்போது அல்லது பலம்வாய்ந்தவர்களாக மாறும் போது ஏற்படும் அபாயம் என்று குறிப்பிட்டுள்ளனர். வீடியோவில் இருக்கும் நபர்களைப் பார்க்கும் போது அவர்கள் இஸ்லாமியர்கள் என்று தெரிகிறது. இதன் மூலம் இஸ்லாமியர்கள் இந்து கோவிலை இடிக்கின்றர் என்று சுற்றி வளைத்து சொல்வது தெரிகிறது.
ஆனால் அவர்கள் இடிக்கும் சுவர் வளைவு சற்று சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதில் உள்ள நாகம் மற்றும் பிறை – நட்சத்திரம், இஸ்லாமியர்கள் வழக்கமாக பயன்படுத்தும் வெளிர் பச்சை நிறம் போன்றவை இது இந்துக்களின் நாக கோவில் தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.
எனவே, வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிசர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இடிக்கப்படுவது இந்துக்களின் நாக கோவில் இல்லை என்பது தெரிந்தது. இஸ்லாமியர்களில் ஒரு சிலர் வழிபாடு நடத்தும் தர்காவை இடிக்க முயற்சி நடந்தது என்று செய்திகள் நமக்கு கிடைத்தன.
செய்தியில் அந்த இடம் தர்காவாக செயல்பட்டது என்றும், தற்போது அந்த இடம் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தப் பள்ளிவாசல் அமைக்க கொடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருந்தது. தர்காவில் இஸ்லாமுக்கு எதிரான சில செயல்பாடுகள் நடந்ததாகவும் அதனால் பள்ளிவாசல் கட்ட அந்த இடம் இடிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: zeenews.india.com I Archive 1 I newindianexpress.com I Archive 2
இந்த தர்காவை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அந்த பகுதியைச் சார்ந்த அனைத்து மதத்தினரும் புனித இடமாகக் கருதி வழிபாடு செய்து வந்துள்ளனர். 40 ஆண்டுகளாக இந்த இடத்தில் வசித்து வந்த நபர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு அந்த இடத்தை பராமரிக்க முயற்சித்த போது பிரச்னை எழுந்தது என்று கூறப்படுகிறது. இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி வருவாய்த் துறையினரின் உதவி நாடப்பட்டுள்ளது. யாருக்கு சொந்தம் என்று தெரியும் வரை அந்த இடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தர்கா இடிக்கப்பட்டது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. அதனால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை” என்று கூறினார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
மற்றொரு செய்தியில், “அந்த இடத்தை நிர்வகித்து வந்த நபர் முதலில் கிறிஸ்தவராக இருந்தார். அதன் பிறகு இஸ்லாமியராக மாறினார். அவரது மனைவியின் பெயர் நாக ரத்னம். அதனால்தான் அந்த சுவர் வளைவில் நாக சின்னத்தை அவர் வைத்துள்ளார். அருகிலேயே பிறை – நிலவு சின்னத்தையும் அவர் வைத்துள்ளார்” என்று இன்ஸ்பெக்டர் பிரபாகர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்த செய்தியில் பாஜக நிர்வாகிகளும் இந்த பிரச்னையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் ஆந்திரப் பிரதேச பா.ஜ.க நிர்வாகிகள் யார், அவர்கள் ட்விட்டர் பக்கம் என்ன என்று தேடினோம். பா.ஜ.க தேசிய செயலாளர் சத்யகுமார் என்பவர் இது தொடர்பாக ட்வீட் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில் அவர் BC Muslims மத உரிமையைப் பறிக்கும் செயலை கண்டிக்கிறேன் என்று கூறியிருந்தார். இதன் மூலம் இடிக்கப்பட்டது இந்துக்களின் கோவில் இல்லை, இஸ்லாமியர்களின் தர்கா என்பது உறுதியாகிறது.
முடிவு:
ஆந்திர மாநிலம் குண்டூரில் நாக கோவிலை சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் இடித்தார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:குண்டூரில் நாக தெய்வத்தின் கோயிலை இஸ்லாமியர்கள் இடித்தார்களா?
Fact Check By: Chendur PandianResult: False
