தமிழக ஆசிரியை ஒருவர் தமிழில் இந்திய தேசிய கீதத்தை மொழிபெயர்த்துப் பாடியுள்ளார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஆசிரியை மற்றும் பள்ளி மாணவர்கள் பாடும் பாடல் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அந்த ஆசிரியை, "நேஷனல் ஆன்தமை தமிழில் பாடப்போகிறோம்" என்கிறார். அதைத் தொடர்ந்து, "இனங்களும், மொழிகளும் ஆயிரம் இருந்தும், மனங்களில் பாரத தாயே" என்று தொடங்கும் பாடலை, இந்திய தேசிய கீதத்தின் மெட்டில் பாடுகிறார். ஆனால், அதற்கும் இந்திய தேசிய கீதத்தின் அர்த்தத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை.

நிலைத் தகவலில், "தமிழில் தேசிய கீதம் பாடி அசத்திய ஆசிரியையும் மாணவிகளும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பலரும் இந்த பாடலை வாழ்த்தியும், விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய "ஜன கண மன அதிநாயக ஜய ஹே" என்ற பாடல் இந்தியாவின் நாட்டுப் பண் ஆக உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு பாட புத்தகத்தில் அர்த்தம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பாட புத்தகம் அனைத்திலும் இந்தியாவின் நாட்டுப் பண் மற்றும் அதன் பொருளைப் பார்க்கலாம். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாடலில் அந்த மொழியாக்கம் இல்லை.

பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டா, திராவிட, உத்கல, பங்கா என்று தேசிய கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளின் பெயர் கூட நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தேசிய கீதத்தில் இல்லை. இதை எப்படி தேசிய கீதம் என்று கூற முடியும் என்ற சந்தேகத்தில் இது தொடர்பாக ஆய்வு செய்தோம். முதலில், தமிழ்நாடு அரசு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள மொழிபெயர்ப்பை எடுத்தோம்.

உண்மைப் பதிவைக் காண: textbookcorp.tn.gov.in I Archive

அதில்,

"இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்

மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.

வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்

எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்

இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!" என்று இருந்தது.

அடுத்ததாக இந்த ஆசிரியை பாடும் தேசிய கீதத்தின் முதல் வரியை அப்படியே கூகுளில் தட்டச்சு செய்து தேடிப் பார்த்தோம். அப்போது, 2019ம் ஆண்டில் இந்த ஆசிரியையின் தமிழ் மொழி பெயர்ப்பு தேசிய கீதம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அதில், "இது அப்படியே நம் தேசியகீதத்துக்குத் தமிழ் மாற்று எனச் சொல்லிவிட முடியாது எனினும் அர்த்தங்களின் அடிப்படையில் மொழிபெயர்த்து இருக்கிறேன்" என்று அந்த ஆசிரியை கூறியதாக விகடனில் செய்தி வெளியாகி இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: vikatan.com I Archive 1 I hindutamil.in I Archive 2

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இருக்கும் சேவூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியையான இவான்ஜிலின் பிரிஸில்லா என்பவர் இந்த மொழியாக்கத்தை செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இனங்களும் மொழிகளும் ஆயிரம் இருந்தும், மனங்களில் பாரத தாயே, வடக்கே விரிந்த தேசாபிமானம், தெற்கில் குமரியில் ஒலிக்கும், இன மத வேற்றுமை உடையில் இருந்தும், இதயத்தில் ஒற்றுமை தானே, உலகினில் எத்திசை அலைந்தும், இறுதியில் இந்தியன் ஆவேன், உறுதியில் மூவர்ணம் தானே, இனமோ மொழியோ எதுவாய் இருந்தும் நிரந்தரம் பாரத தாயே, வாழ்க வாழ்க என்றென்றும் நீ வாழ்க” என்று தேசிய கீதத்தின் சாரத்தை மையமாக வைத்து இந்த பாடலை உருவாக்கியதாக அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாடல் தமிழில் பாடப்பட்ட இந்திய தேசிய கீதம் இல்லை என்பதும், தேசிய கீதம் சாயலில் உருவாக்கப்பட்ட பாடல் என்பதும் தெளிவாகிறது. இதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தேசிய கீதம் என்று கூறுவது சரியாக இருக்காது என்பதும் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது தெளிவாகிறது.

முடிவு:

இந்திய தேசிய கீதத்தை தமிழில் பாடிய ஆசிரியரும் மாணவர்களும் என்று பரவும் பாடல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழில் பாடப்படும் இந்திய தேசிய கீதம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Misleading