பிரதமர் மோடியை வரவேற்க மலர்கள் தூவப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archive

புல்டோசர் வாகனத்தின் பக்கெட் பகுதியில் அமர்ந்துகொண்டு கார் அணிவகுப்பு மீது மலர் தூவும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இவ்வளவு டிஜிட்டல் காலத்திலும் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் இன்னமும் இந்த முட்டாள் சங்கிகள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்

*மோடிக்கு மக்கள் மலர் தூவவில்லை. வாடகை வண்டிகளில் கூலி ஆட்களை வைத்து http://P.M.CARE FUND நிதியில் இருந்து சர்க்கஸ் நடத்தப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை சிந்தனை @mdunis59 என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 மே 15ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த வீடியோவை யாரும் ஃபேஸ்புக் உள்ளிட்ட இதர சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம். இந்த வீடியோவை Nooh Ka என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் பதிவிட்டிருந்தார். இவர்களைப் போலப் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடி ரோட் ஷோ செய்யும் போது பொது மக்கள் மலர் தூவி அவரை வரவேற்கின்றனர். பா.ஜ.க-வினரே மலர்களை ஆட்களை வைத்துத் தூவுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியை மலர் தூவி வரவேற்கும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் போது, பிரதமரின் வாகன அணி போல இல்லை. பிரதமரின் பாதுகாவலர்கள், கமாண்டோ பாதுகாப்பு என எதுவும் இல்லை. எனவே, இது பிரதமர் மோடியை வரவேற்ற காட்சியா என்ற சந்தேகம் எழவே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

Archive I lokmat.com I Archive I nationalheraldindia.com I Archive

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மகாராஷ்டிரா முதல்வருக்கு இப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது என்று கூறி ட்விட்டரில் சிலர் பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து தேடிய போது இந்த வீடியோவை முதலில் வௌியிட்ட LoksattaLive @LoksattaLive என்ற ட்விட்டர் பக்கத்தின் வீடியோ நமக்கு கிடைத்தது. அதிலும் கூட மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சாத்ரா என்ற இடத்தில் 50 ஜேசிபி இயந்திரங்கள் மலர் தூவி வரவேற்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் உள்ள தகவல் அடிப்படையில் கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது ஏபிபி ஊடகம் உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளியான செய்திகள், வீடியோஸ் நமக்கு கிடைத்தன. அவற்றில் மகாராஷ்டிர முதல்வர் ஷிண்டேவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், பிரதமர் மோடியை ஜேசிபி இயந்திரங்களில் இருந்து மலர் தூவி வரவேற்கும் காட்சி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து மலர் தூவ பணம் ஒதுக்கப்பட்டதாக இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. பிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமானது இல்லை. அதனால் அது ஆர்.டி.ஐ வரம்புக்குள் வராது என்று பிரதமர் அலுவலகம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன் கணக்கு வழக்குகளை பொது மக்கள் காண முடியாது. அப்படி இருக்கும் போது பிஎம் கேர்ஸ்-ல் இருந்து மோடியை மலர் தூவி வரவேற்க நிதி செலவிடப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

முடிவு:

மோடிக்கு ஜேசிபி இயந்திரத்தில் இருந்து மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் வீடியோ என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:புல்டோசர் மூலம் மோடிக்கு மலர் தூவிய காட்சி என்று பரவும் வீடியோ- உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian

Result: False