“ஹமாஸ் ஆதரவு கோஷமிட்ட பெண்ணை காஸாவில் குடியேறச் சொன்னபோது கதறி அழுதார்” என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சர்வதேச அளவில் I International

ஹமாசை ஆதரித்துக் கோஷமிட்ட பெண்ணை ஹமாசின் தலைமையகம் உள்ள காஸாவில் குடியேற இஸ்ரேலிய போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்ட போது கதறி அழுதார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெண் ஒருவரிடம் இஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவர்கள் பேசுவது புரியவில்லை. நிலைத் தகவலில், “இஸ்ரேலில் உள்ள இப்பெண் விளையாட்டாக ஹமாஸை ஆதரித்து உற்சாகமாக கோஷம் போட்டார். அதுவே அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

அப்பெண்ணின் இருப்பிடம் சென்ற இஸ்ரேல் காவல்துறை அதிகாரி உங்கள் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் ஹமாஸின் தலைமையகம் காஸாவில் குடியேறி ஆனந்தமாக வாழுங்கள். அங்கு சென்று குடியேறவும் என்று கூறினார்.

இந்த உத்தரவைக் கேட்டவுடன் அப்பெண் கதறுவதைப் பாருங்கள்.

நமது நாட்டிலும் ஹமாஸ், சிரியா, பாலஸ்தீனம், பாகிஸ்தான் ஆகியவற்றை ஆதரிப்பவர்களையும்

சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அங்கு இறக்கிவிடலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கோஷமிட்ட பெண்ணை காஸா நகருக்கு அனுப்பிய இஸ்ரேல் என்று குறிப்பிட்டு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இஸ்ரேலில் சொகுசாக வாழ்ந்த அந்த பெண், காஸாவில் வாழ சொன்னதைக் கேட்டு அழுததாகவும், அதே போல் பாகிஸ்தானை ஆதரித்து பதிவிடுபவர்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பற்றி குறிப்பிடப்பட்டுள்ள தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள தகவலை வைத்து பலரும் இதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: aljazeera.com I Archive I palestinechronicle.com I Archive

வேறு வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுத் தேடிய போது, ரஷ்ய மொழியில் வெளியான பதிவு ஒன்று கிடைத்தது. அதில், பயங்கரவாதத்திற்கு ஆதரவான கருத்தை வெளியிட்ட பெண்ணை கைது செய்த போலீஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவில் இடம் பெற்றிருந்த சில தகவல்களைப் பயன்படுத்தி கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான செய்தி நமக்கு கிடைத்தது.

அதில், “இஸ்ரேல் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனிய பெண் ஒருவர் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பயங்கரவாத ஆதரவு கருத்தைப் பதிவிட்டது தொடர்பாக இஸ்ரேலிய போலீசாரால் கைது செய்யப்பட்டார். புதிதாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் காஸா பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய உத்தரவிடப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

அந்த பெண்ணுடன் இஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் பேசியதின் மொழிபெயர்ப்புகள் நமக்கு கிடைத்தன. அதில், “நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக, ஊக்குவிக்கும் வகையில் பதிவு வெளியிட்டிருந்தீர்கள்” என்று போலீஸ் அதிகாரி கூறுகிறார். அதற்கு அந்த பெண், “இல்லை, இல்லை அதற்கு வாய்ப்பே இல்லை. நான் இஸ்ரேலுக்கு வெற்றியைத் தரட்டும் என்றுதான் பதிவிட்டிருந்தேன். சத்தியமாக அப்படித்தான் சொல்லியிருந்தேன்” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அந்த போலீஸ் அதிகாரி, “உங்களுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான தொடர்பு பற்றி ஆய்வு செய்வோம்” என்கிறார். அந்த பெண் இல்லை என்று கதறுகிறார். மற்றபடி காஸா நகருக்கு நாடு கடத்தப்படுவதாக அவர் கூறியதாக எந்த பதிவும் இல்லை. 

நம்முடைய ஆய்வில், இஸ்ரேலில் பாலஸ்தீன பெண் ஒருவர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கருத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்ததற்காகக் கைது செய்யப்பட்ட வீடியோவை எடுத்து தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்ததாக பெண் ஒருவரை இஸ்ரேலிய போலீஸ் கைது செய்த வீடியோவை காஸாவில் குடியேற உத்தரவிட்டதால் கதறி அழுத பெண் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“ஹமாஸ் ஆதரவு கோஷமிட்ட பெண்ணை காஸாவில் குடியேறச் சொன்னபோது கதறி அழுதார்” என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply