FACT CHECK: மியா கலிஃபாவுக்கு ஆதரவு தெரிவித்து மே 17 இயக்கம் பேரணி நடத்தியதாக பகிரப்படும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மியா கலிஃபா, சன்னி லியோனுக்கு ஆதரவு தெரிவித்து மே 17 இயக்கம் சார்பில் பேரணி நடந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

“வாழ்க மியா கலிஃபா, வளர்க சன்னி லியோன் – மே பதினேழு இயக்கம்” என்று பேனர் பிடித்தபடி பெண்கள் பேரணி சென்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடடா இந்த மே17 இயக்கம் இந்த நிர்வாண நடிகைகளோட ஏஜென்டுகளின் அமைப்பா ? இது தெரியாம போச்சே இவ்வளவு நாளா ?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Munusamy K என்பவர் 2021 பிப்ரவரி 12ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மே பதினேழு இயக்கத்தினர் மியா கலிஃபா, சன்னி லியோனுக்கு ஆதரவாக பேரணி சென்றதாகப் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒருவர், “ஆபாச இணையதளத்தை முடக்கக் கூடாது” என்று பேனர் பிடித்துள்ளார். சிலர் அம்பேத்கர் படத்தையும் வைத்துள்ளனர். சன்னி லியோனுக்கு ஆதரவு பேரணி என்றால் அதில் எதற்கு அம்பேத்கர் படம் என்ற கேள்வி எழுந்தது. 

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இது தொடர்பான படம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. வேறு வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் இந்த படத்தைப் பதிவேற்றம் செய்து தேடினோம். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. கூகுளில் மே 17 இயக்கம், பேரணி என்று பல கீ வார்த்தைகளை வைத்து தேடினோம். அப்போது, கோவையில் நீலச்சட்டை மாநாடு நடந்ததாக ஒரு புகைப்படம் கிடைத்தது. அதில், தரையில் விரிக்கப்பட்டிருந்த பேனரும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் பெண்கள் பிடித்திருக்கும் பேனரும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பது தெரிந்தது.

இதன் அடிப்படையில் மே 17 இயக்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். சரியாக ஓராண்டுக்கு முன்பாக அதாவது 2020 பிப்ரவரி மாதத்தில் நீலச்சட்டை மாநாடு நடந்திருப்பது தெரிந்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் படத்தின் அசல் புகைப்படம் கிடைத்தது. 

அதில், “சனாதன காவி ஒழியட்டும். சமத்துவ நீலம் பரவட்டும். மே பதினேழு இயக்கம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மேலும் ஆபாச இணையதளங்களை தடை செய்யக் கூடாது என்று இருந்த பேனரில், “நீட் தேர்வைத் திரும்பப் பெற வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர். 

மே 17 இயக்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம், 2020 பிப்ரவரி 9ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தனர். இதன் மூலம் மே 17 இயக்கத்தின் புகைப்படத்தை எடிட் செய்து, அநாகரீக, அசிங்கமான கருத்தைச் சேர்த்து விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.

இதன் அடிப்படையில், மியா கலிஃபா, சன்னி லியோனுக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தினர் பேரணி சென்றதாக பகிரப்படும் படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மியா கலிஃபாவுக்கு ஆதரவாக மே 17 இயக்கம் பேரணி சென்றதாக பகிரப்படும் புகைப்படம் போட்டோஷாப் முறையில் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:FACT CHECK: மியா கலிஃபாவுக்கு ஆதரவு தெரிவித்து மே 17 இயக்கம் பேரணி நடத்தியதாக பகிரப்படும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: Altered