
உலகை அச்சுறுத்திய சீன ராக்கெட் கடலில் விழுந்தது தொடர்பாக பல வதந்திகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “விண்வெளியிலிருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சீன ராக்கெட் தென்காசி அருகே விழும் என தகவல் வெளியாகியுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Krishna Moorthy என்பவர் 2021 மே 9 அன்று பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
பூமியில் விழுந்த ராக்கெட் என்று ஒரு வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். “இந்நிலையில் இந்தியப்பெருங்கடலின் மாலத்தீவு அருகே மேற்படி ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம் விழுந்து உள்ளது” என்று குறிப்பிட்டு Christopher Daniel என்பவர் 2021 மே 10 அன்று வீடியோவை பதிவிட்டுள்ளார். பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சீனாவின் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த நிகழ்வு உள்ளூர் முதல் உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. அதை வைத்து நம் ஊரில் வதந்திகளும் கிளம்பிவிட்டன. அது இந்தியப் பெருங்கடலில் விழுந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட் தென்காசி அருகே விழப்போவதாக சமூக ஊடகங்களில் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் இல்லை என்பதால் பார்க்கும்போதே இது போலியானது என்று தெரிந்தது. இதை உறுதி செய்ய முதலில் நியூஸ் 7 தமிழ் சமூக ஊடக பக்கங்களைப் பார்த்தோம். அதில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்த பதிவு கிடைத்தது. இதன் மூலம், தென்காசி அருகே சீன ராக்கெட் விழப்போவதாக பரவிய நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியானது.
அடுத்ததாக மாலத்தீவு அருகே கடலில் விழுந்த சீன ராக்கெட் என்று பரவும் வீடியோவை ஆய்வு செய்தோம். அந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்திய செவ்வாய்க் கிரகத்துக்கான மாதிரி விண்கலம் பரிசோதனை வீடியோ என்பது தெரிந்தது. பிப்ரவரி மாதம் 4ம் தேதி இந்த சோதனை தோல்வியில் முடிந்தது.
இது தொடர்பாக அப்போது வெளியான பல செய்திகள் மற்றும் வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. இதன் மூலம் மாலத்தீவு அருகே கடலில் விழுந்த சீன ராக்கெட் என்று பரவும் வீடியோ தவறானது என்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில், தென்காசி அருகே சீனாவின் ராக்கெட் விழப்போவதாக பரவிய நியூஸ் கார்டு போலியானது என்று நியூஸ் 7 தமிழ் உறுதி செய்துள்ளது. மாலத்தீவு அருகே கடலில் விழுந்த ராக்கெட் என்று பரவும் வீடியோ 2021 பிப்ரவரியில் நடந்த செவ்வாய்க்கான மாதிரி விண்கலம் தரையிரங்கும் விபத்து என்பது தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இரண்டு பதிவுகளும் தவறானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.
முடிவு:
மாலத்தீவு அருகே கடலில் விழுந்த சீன ராக்கெட் என்று பரவும் வீடியோ 2021 பிப்ரவரியில் நிகழ்ந்த செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தயாரிக்கப்பட்டு வரும் மாதிரி விண்கலம் பரிசோதனையின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுந்த சீன ராக்கெட் என்று பரவும் தவறான வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
