வால்நட் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் கரையுமா?

Health தமிழ்நாடு | Tamilnadu

வால்நட் பருப்பை தினமும் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கற்கள் கரையும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் கார்டு டைப்பில் மருத்துவக் குறிப்பை பகிர்ந்துள்ளனர். அதில், “பித்தப்பையில் கற்கள். வால்நட் பருப்பை தினமும் ஊற வைத்து சாப்பிட கற்கள் படிப்படியாக கரையும். குறிப்பாக வலியின்றி கற்களை உடலில் இருந்து வெளியேற்றி விடும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பித்தப்பை கற்கள் வந்துவிட்டால் அதற்கு பொதுவாக அறுவைசிகிச்சையைத் தவிர வேறு எந்த சிகிச்சையும் பலன் அளிக்காது. கல் சிறிய அளவிலிருந்தால் சித்த, ஆயுர்வேத, அக்குபஞ்சர் முறைகளில் சிகிச்சை அளிப்பார்கள். அதுவே மிகவும் பெரிய கல்லாக இருந்தால் அவர்களும் கூட அறுவைசிகிச்சை செய்வதுதான் சரி என்று கூறிவிடுவார்கள்.

ஆனால், தினமும் வால்நட்டை ஊற வைத்து சாப்பிட்டாலே பித்தப்பை கற்கள் எளிதாகக் கரைந்துவிடும் என்று பதிவிட்டுள்ளனர். கல்லீரலில் சுரக்கும் பைல் (Bile) என்ற திரவம் பித்தப்பையில் சேகரிக்கப்படும். அந்த திரவம் சிறிய மென்மையான குழாய் வழியே பயணித்து சிறுகுடலை அடைந்து உணவு செரிமானத்தில் கொழுப்பைச் செரிமானம் செய்யத் துணை புரிகிறது. இந்த சிறிய குழாயில் அடைப்பு ஏற்பட்டால் பித்த நீர் வெளியேற முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் இது கணையத்திலிருந்து சுரக்கும் உணவை செரிமானம் செய்ய உதவும் சுரப்புகள் செல்வதை தடை செய்யும் போது கணைய அழற்சி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். அப்படி இருக்க இந்த தீர்வை மட்டும் ஒருவர் நம்பியிருந்தால் உயிருக்கே கூட ஆபத்தாக வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த தகவல் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வால்நட் சாப்பிட்டால் பித்தப்பை கல் கரையும் என்று ஏதேனும் ஆய்வு உள்ளதா என்று அறிய கூகுள் லென்ஸில் இது தொடர்பான அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை. மேலும், தமிழில் வெளியான எந்த ஒரு சித்த மருத்துவக் குறிப்பிலும் கூட வால்நட் சாப்பிட்டால் பித்தப்பை கல் கரையும் என்று கூறவில்லை.

இது தொடர்பாக மூத்த, வயிறு இரைப்பை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாசுமணியிடம் பேசினோம். “பித்தப்பை கல் இருந்தால் அதன் அளவு, காம்ப்ளிகேஷன் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும். சிறிய கல் என்றால் மாத்திரை மருந்து அளிக்கப்படும். ஆனால் கல் பெரிதாக, சிக்கலானதாக இருந்தால் அறுவைசிகிச்சை ஒன்றே தீர்வு. 

பித்தப்பை கல் உருவாகாமல் தடுக்க முடியாது. இருப்பினும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, நார்ச்சத்து உள்ள உணவுகள், மீன், புரதச்சத்து மிக்க காய்கறிகள், வைட்டமின் சி நிறைந்த உணவுகள் எடுப்பது பித்தப்பை கல் வருவதற்கான வாய்ப்பை குறைக்க உதவும். மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அவகேடோ, எள், பூசனி விதை, ஆலிவ் எண்ணெய், பாதாம், வால்நட் போன்ற கொட்டை வகைகளில் உள்ளது. அதே போல் சர்க்கரை உணவுகள், அதிக கெட்ட கொழுப்பு உள்ள உணவுகள், துரித உணவுகள், எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதும் பித்தப்பை கற்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்” என்றார்.

இது தொடர்பாக அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமாரைத் தொடர்புகொண்டு பேசினோம். அதற்கு அவர், “மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், வேறு சில உணவுகளுடன் வால்நட்டும் சாப்பிட்டு வந்தால் சிறிய அளவிலான கற்கள் கரையலாம். ஆனால், வால்நட் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் கரையும் என்று கூறவிட முடியாது.

கல் மிகச் சிறிய அளவிலிருந்தால், பித்தநாளத்தை எளிதாக கடக்கும் அளவுக்கு இருந்தால் அதை வால்நட் உள்ளிட்ட சில உணவுகள் எடுப்பதன் மூலம் கரைக்கலாம். ஆனால், பெரிய கற்கள், பித்த நாளத்தில் கற்கள் அடைத்துக் கொண்ட நிலை போன்றவற்றில் எல்லாம் பலன் தராது. அந்த மாதிரியான சூழலில் அறுவைசிகிச்சை ஒன்றே தீர்வாக இருக்கும். எனவே, பித்தப்பை கல் பிரச்னை என்றால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். கல்லின் அளவைப் பொறுத்து, மருத்துவர் பரிந்துரைத்தால், அவர் அளிக்கும் மருந்துகளுடன் வால்நட் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பலன் பெற வாய்ப்பு உள்ளது. இல்லை என்றால் அது சிக்கலை ஏற்படுத்திவிடலாம்” என்றார்.

வால்நட் மட்டும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் குணமாகும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மருத்துவர் பரிந்துரைத்த மருந்து, உணவுகளுடன் வால்நட் சாப்பிட்டு வந்தால் கல் கரையலாம் ஆனால் பெரிய அளவு கல் என்றால் பலன் தராது என்று சித்த மருத்துவரும் உறுதி செய்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தினமும் வால்நட் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் கரையும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பித்தப்பை கல் பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் செயல்படுவது மட்டுமே நல்லது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:வால்நட் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் கரையுமா?

Fact Check By: Chendur Pandian 

Result: False