FACT CHECK: தி.மு.க வேட்பாளர் பட்டியலில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?– வைரல் வதந்தி
தி.மு.க வேட்பாளர் பட்டியலில் ஒரு இஸ்லாமியருக்கு கூட சீட் வழங்கப்படவில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
சினிமா காட்சி ஒன்றின் புகைப்படத்தில் ஸ்டாலின் இருப்பது போல மாற்றி எடிட் செய்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "திமுக போட்டியிடும் 173 தொகுதியில் ஒரு சீட் கூட இஸ்லாமியர் சமுதாயத்திற்கு இல்லையா?? அப்புறம் என்ன இது சிறுபான்மையினருக்கான கட்சி. இஸ்லாமிய சகோதரர்களே நாம் சிந்திக்க வேண்டிய தருணம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், "பாமக நிற்கும் 23 தொகுதிகளில் ஒரு தொகுதி இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக நிற்கும் 173 தொகுதிகளில் ஒரு தொகுதி கூட இஸ்லாமியருக்கு இல்லை..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்பட பதிவை Kannan M என்பவர் மார்ச் 15, 2021 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாட்டாளி மக்கள் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளில் ஒன்றில் இஸ்லாமியரை நிறுத்தியுள்ளது. ஆனால், 173 தொகுதியில் போட்டியிடும் தி.மு.க இஸ்லாமியருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் உண்மையா என்று சரி பார்த்தோம். தி.மு.க வேட்பாளர் பட்டியலை பார்த்தபோது, அதில், பாளையங்கோட்டை - அப்துல் வஹாப், செஞ்சி மஸ்தான், ஆவடி நாசர், ராமநாதபுரம் கா.காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என்று நான்கு பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இதில் ராமநாதபுரம் கா.காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என்ற பெயர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. எனவே, இது பற்றி அறிந்துகொள்ள ராமநாதபுரம் பகுதியில் பணியாற்றும் மூத்த நிருபர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர் கா.காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் இஸ்லாமியர் இல்லை. இஸ்லாமியர்களுடன் நெருங்கியத் தொடர்புகொண்டவர்கள் என்பதால் இஸ்லாமியப் பெயரையும் சேர்த்து வைத்துள்ளனர் என்றார்.
அசல் பதிவைக் காண: dmk.in I Archive 1 I bbc.com I Archive 2
தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர். இதைக் கணக்கிட்டுப் பார்த்தால் தி.மு.க கூட்டணியில் சிறுபான்மையினருக்குக் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதைத் தெரிந்துகொள்ளலாம்.
நம்முடைய ஆய்வில், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் மூன்று இஸ்லாமியர்கள் நிறுத்தப்பட்டுள்ளதையும், கூட்டணிக் கட்சிகள் சார்பில் பல இஸ்லாமியர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளதையும் நிரூபித்துள்ளோம். இதன் அடிப்படையில் தி.மு.க போட்டியிடும் 173 இடங்களில் ஒரு இஸ்லாமியருக்கு கூட இடம் ஒதுக்கப்படவில்லை என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க ஒரு இஸ்லாமியருக்கு கூட எம்.எல்.ஏ சீட் வழங்கவில்லை என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:தி.மு.க வேட்பாளர் பட்டியலில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?– வைரல் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False