
மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியா வாங்கியது என்றும் இதற்கான ஒப்பந்தத்தில் மாலத்தீவு அதிபர் கையொப்பமிட்டார் என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2
ஜீ நியூஸ் வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியாவாங்கியது அதற்கான ஒப்பந்தத்தில் மொய்சு கையெழுத்திட்டார். தீவுகள் ஒப்படைக்கப் பட்டன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மாலத்தீவில் உள்ள 28 தீவுகளை இந்தியா வாங்கியது என்றும் தீவை இந்தியாவிடம் மாலத்தீவு ஒப்படைத்தது என்றும் பரவும் தகவல் துளியும் நம்பும் வகையில் இல்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். ஜீ நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியை ஆதாரமாக அளித்திருந்ததால் அந்த வீடியோவை தேடி எடுத்தோம்.
உண்மைப் பதிவைக் காண: zeenews.india.com I Archive
அப்போது ஜீ ஆங்கிலத்தில் வெளியான செய்தியும் நமக்குக் கிடைத்தது. அதில், “சீனாவிற்கு எதிராக இந்தியாவிற்கு ஒரு பெரிய ராஜதந்திர வெற்றி காரணமாக, மாலதீவுகள் இந்த காரணத்திற்காக 28 தீவுகளை புது தில்லியிடம் ஒப்படைக்கின்றன” என்று ஆங்கிலத்தில் தலைப்பிட்டிருந்தனர். தலைப்பை பார்க்கும் போது மாலத்தீவு 28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்தது என்ற அர்த்தம் வருகிறது. ஆனால் செய்தியின் உள்ளே “28 தீவுகளில் குடிநீர், கழிவு நீர் அகற்றல் வசதியை செய்து கொடுத்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தனர். தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் தலைப்பிட்டிருந்தது தெரிந்தது.
ஜீ இந்தி-யில் வெளியான வீடியோ மற்றும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவிடம் அளித்து, அதில் என்ன சொல்லியுள்ளார்கள்… 28 தீவுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்களா என்று கேட்டோம். அந்த வீடியோவை பார்த்த பிறகு அவர்கள், “28 தீவுகள் இந்தியாவசம் வந்தது என்பது போன்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 28 தீவுகளில் குடிநீர் – கழிவுநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அது ஒப்படைக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். வழக்கம் போல ஜீ டிவி செய்தியை மிகைப்படுத்திக் கூறியுள்ளது. இது தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டது. 28 தீவுகளில் குடிநீர் – கழிவுநீர் அகற்றும் வசதி செய்து தரப்பட்டுள்ளது என்பதே உண்மை” என்றனர்.
இதைத் தொடர்ந்து நம்முடைய ஆய்வை மேற்கொண்டோம். அந்த வீடியோவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவு இருந்தது. அதை அவரது எக்ஸ் தள பக்கத்திற்கு சென்று எடுத்துப் பார்த்தோம். அதில், “It was a pleasure to meet @DrSJaishankar today and join him in the official handover of water and sewerage projects in 28 islands of the Maldives” என்று இருந்தது. அதாவது, “இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இணைந்து மாலத்தீவின் 28 தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் – கழிவுநீர் அகற்றும் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறியிருந்தார்.
மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியாவுக்கு வழங்குவதாக அவர் எங்கும் அதில் குறிப்பிடவில்லை. அடுத்ததாக மாலத்தீவு அதிபரின் அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி வெளியீட்டில் ஏதாவது அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அதில், 28 தீவுகளில் குடிநீர் – கழிவுநீர் அகற்றல் திட்டம் தொடக்கம் தொடர்பாக பத்திரிகை செய்தி வெளியாகி இருந்தது. அதில், “இந்திய அரசு மற்றும் இந்தியாவின் எக்ஸிம் வங்கிக் கடன் உதவியுடன் நிறைவேற்றப்பட்ட 28 தீவுகளில் அமைக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வசதி ஒப்படைக்கப்பட்டது.
உண்மைப் பதிவைக் காண: presidency.gov.mv I Archive
விழாவில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், மாலத்தீவுகள் வெளியுறவுத் துறை அமைச்சர் மூசா ஜமீரிடம், இந்திய அரசிடம் இருந்து மாலத்தீவு அரசுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை அதிகாரப்பூர்வமாகக் கையளித்தார்” என்று குறிப்பிடப்பட்டது. அதாவது, திட்டம் நிறைவேற்றப்பட்டு மாலத்தீவு அரசிடம் அது ஒப்படைக்கப்பட்டது என்ற அர்த்தம் வருகிறது.
இது தொடர்பாக தமிழ் ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தேடிப் பார்த்தோம். தினமணி உள்ளிட்ட ஊடகங்களில் அந்த செய்தி வெளியாகி இருந்தது. மாலத்தீவில் இந்திய நிதியுதவியுடன் 110 மில்லியன் டாலர் மதிப்பிலான குடிநீர் திட்டம் தொடக்கம் என்று தலைப்புடன் செய்தி வெளியிட்டிருந்தனர். எந்த இடத்திலும் 28 தீவுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. இவை எல்லாம் மாலத்தீவின் 28 தீவுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
உண்மைப் பதிவைக் காண: dinamani.com I Archive
ஜீ நியூஸ் மிகைப்படுத்தி வெளியிட்ட செய்தியை உண்மை என்று நம்பி, தலைப்பை மட்டும் வைத்து பலரும் மாலத்தீவின் 28 தீவுகளை மோடி அரசு வாங்கியது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மாலத்தீவுகளில் 28 தீவுகளில் இந்தியாவின் உதவியுடன் நிறைவேற்றப்பட்ட குடிநீர் – கழிவுநீர் அகற்றல் திட்டப் பணிகளை மாலத்தீவிடம் ஒப்படைத்த நிகழ்வை மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியா வாங்கியது என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
