FACT CHECK: பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த துருக்கி ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக துருக்கி ராணுவம் வந்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். ராணுவ அணிவகுப்பின் விடியோ அது. டாங்கிகள், ஏவுகணைகள், ஏவுகணை செலுத்தும் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன. மக்கள் அதை பார்க்கின்றனர். வாசகர் அனுப்பிய பதிவில், “துருக்கி இரானுவம் பலஸ்தீனில் நுலைந்ததை கன்டு திடுக்கிட்ட இஸ்ரேல் போர் நிருத்தத்தை அறிவித்தது…” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் யாரும் ஷேர் செய்கிறார்களா என்று பார்த்தோம். அப்போது பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. அதிரடி பஷீர் என்பவர் 2021 மே 21ம் தேதி பதிவிட்ட வீடியோ அடிப்படையில் நாம் ஆய்வை மேற்கொண்டோம்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 10 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது. ஹமாஸின் போர் நிறுத்த அறிவிப்பை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில் பாலஸ்தீனத்துக்குள் துருக்கி ராணுவம் நுழைந்ததால் பயந்து போன இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். பாலஸ்தீனத்துக்கும் துருக்கிக்கும் இடையே சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் உள்ளன. சிரியாவில் ஏற்கனவே உள்நாட்டுப் போர் உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி துருக்கி ராணுவம் வந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

மேலும், வீடியோ தெளிவாக இல்லை என்றாலும் ராணுவ வாகனங்களில் உள்ள அடையாளங்களைப் பார்க்கும் போது ரஷ்ய நாட்டு ராணுவம் போல தெரிந்தது. எனவே, இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவை InVID & WeVerify தளத்தில் பதிவேற்றி புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் நமக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. yandex.com ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது நமக்கு இந்த ஓராண்டாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. 2020 ஜூன் 26ம் தேதி இந்த வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தனர்.

ரஷ்ய மொழியில் இருந்ததை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தோம். அப்போது, மாஸ்கோவில் நடந்த வெற்றி தின ராணுவ தளவாட அணிவகுப்பு காட்சி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அசல் பதிவைக் காண: YouTube I tubidy.blue 

யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோ 39 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது. அதில், சரியாக 28.44வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகள் இடம் பெறுவதைக் காண முடிந்தது. 

இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை ஹமாஸ் 21 மே 2021 அன்று அறிவித்தது. ஆனால் அதற்கு 11 மாதங்களுக்கு முன்னதாக இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது மாஸ்கோவில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் இது ரஷ்ய ராணுவம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக துருக்கி ராணுவம் பாலஸ்தீனத்துக்குள் நுழைந்தது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாலஸ்தீனத்துக்குள் துருக்கி ராணுவம் நுழைந்தது என்று பகிரப்படும் வீடியோ 2020ம் ஆண்டு ரஷ்யாவின் வெற்றிதின ஊர்லவத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த துருக்கி ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •