வங்கதேசத்தில் அரசுப் பணியில் உள்ள இந்துக்களிடமிருந்து கட்டாயப்படுத்தி பணி விலகல் கடிதத்தை ஜமாத் இ இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பு வாங்குகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2

பெண் அதிகாரி ஒருவரைச் சுற்றி ஏராளமானோர் கூட்டமாக நின்று கட்டாய கையெழுத்து வாங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், " பங்களாதேஷில் ஜமாத் இ இஸ்லாமி தீவிரவாத அமைப்பினர் அரசு அலுவலகங்களில் புகுந்து இந்து அதிகாரிகளிடம் ராஜினாமா கடிதம் பெற்று விரட்டி விடுகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து இந்துக்கள் மீது தாக்குதல் நடக்கிறது என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தற்போது, வங்கதேசத்தில் அரசாங்க பணியில் உள்ள இந்துக்களை ராஜினாமா செய்ய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிரட்டுவதாக வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது வங்கதேச ஊடகத்தில் இந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சியுடன் வெளியான செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. ஆகஸ்ட் 11, 2024 அன்று அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது. வங்க மொழியில் வெளியான அந்த செய்தியை கூகுள் டிரான்ஸ்லேட்டர் பயன்படுத்தி மொழிமாற்றம் செய்து பார்த்தோம்.

உண்மைப் பதிவைக் காண: jagonews24.com I Archive

அதில், "கபி நஸ்ருல் அரசு கல்லூரி முதல்வரிடம் கட்டாய பதவி விலகல் கடிதம் வாங்கிய போராட்டக் குழுவினர்" என்று குறிப்பிடப்பட்டிருந்த. கல்லூரி முதல்வரின் பெயர் அமீனா பேகம் என்றும் அவர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர் என்றும் இதன் காரணமாகப் போராட்டக்காரர்கள் அவரை பதவி விலகும்படி வற்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, "நான் ராஜினாமா செய்தேன்" என்று அமீனா பேகம் ஒரு வெள்ளைத் தாளில் எழுதிக் கொடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அந்த கடிதத்தில் கல்லூரி முதல்வரின் முத்திரையை பதித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அமீனா பேகம் அவாமி லீக்கின் கல்வி மற்றும் மனித வளம் தொடர்பான துணைக் குழுவின் உறுப்பினராக இருந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் இது குறித்து கூறுகையில், "மாணவர்கள் போராட்டத்தின் போது இந்த கல்லூரியைச் சார்ந்த நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இந்த கல்வி நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் முதல்வராக இருந்த அமீனா பேகம் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. ஊழல் மற்றும் சர்வாதிகாரத்தின் அடையாளமாக உள்ள அவாமி லீக் கட்சியின் தலைமை மட்டத்தில் அவர் இருந்தார். கல்லூரியில் பல ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது. அதன் அடிப்படையில் போராட்டம் நடத்தினோம். இதனால் பதவியை விட்டு விலக வேண்டிய கட்டாயம் அமீனா பேகத்துக்கு ஏற்பட்டது" என்றார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடிய போது கல்லூரி முதல்வர் அமீனா பேகத்தின் வேறு சில வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. இதன் மூலம் வங்கதேசத்தில் அரசுப் பணியில் உள்ள இந்துக்களை கட்டாயப்படுத்தி பதவி விலகல் கடிதம் வாங்குகிறார்கள் என்று பரவும் வீடியோ மற்றும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி ஆதரவு கல்லூரி முதல்வரிடம் இருந்து போராட்டக்காரர்கள் ராஜினாமா கடிதம் வாங்கிய நிகழ்வை வங்கதேசத்தில் அரசு பணியில் உள்ள இந்துக்களிடம் இருந்து கட்டாய பதவி விலகல் கடிதம் வாங்கப்படுகிறது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேசத்தில் இந்து அதிகாரிகளை ராஜினாமா செய்ய வற்புறுத்தும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Partly False