வங்கதேசத்தில் கல்லூரியிலிருந்து பெண்களை விரட்டும் ஜிகாதிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Communal சர்வதேசம் | International

வங்கதேசத்தில் பெண் கல்வி என்பது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்று கல்லூரியில் இருந்து பெண்களை விரட்டி அடிக்கும் ஜிகாதிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive

கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் பாட்டு பாடி, கையில் வைத்திருந்த குச்சியை வைத்து தரையில் அடித்துவிட்டு பின்னர் வெளியே செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “_பங்களாதேஷில் பெண்களை கல்லூரிகளில் இருந்து விரட்டும் ஜிஹாதிகள்…👙_

_பெண்கல்வி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாம்..!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை எக்ஸ் தளத்திலும் சிலர் பதிவிட்டுள்ளனர். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் இந்துக்களைத் தொடர்ந்து இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இறங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது அந்த இளைஞர் யாரையும் படிக்கக் கூடாது என்று விரட்டியது போல இல்லை. அவராக பாடல் பாடிக்கொண்டு வந்தார், பின்னர் செல்கிறார். எனவே, என்ன நடந்தது என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிப் பார்த்தோம். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக வங்கதேச ஊடகங்களில் வெளியான செய்திகள் கிடைத்தன. அதில் பெண்கள் படிக்கக் கூடாது என்று விரட்டியதாக எந்த தகவலும் இல்லை. இந்த சம்பவம் 2024 அக்டோபர் 27ம் தேதி மிட்ஃபோர்ட் மருத்துவக் கல்லூரியில் நடந்தது என்றும், வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது செய்யப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: shampratikdeshkal.com I Archive 1 I thedailycampus.com I Archive 2

வகுப்பறைக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாக மாணவி ஒருவர் ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த கைது சம்பவம் நடந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வங்க மொழியில் வெளியான மற்றொரு செய்தி கிடைத்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில் வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், 10 ஆண்டுகளாக அவர் மனநலம் பாதிப்புடன் இருப்பதாகவும், அவ்வப்போது மனநல பிரச்னை அவருக்கு எழும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

10 வருடங்களுக்கு முன்பு திடீரென்று ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு கூச்சலிட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவருக்கு மனநல பிரச்னை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட சூழலில் அவர் வீட்டில் அடைத்து வைத்திருப்போம் என்றும் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமடைந்தார் என்று மருத்துவர் கூறியதால் அவர் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டார் என்று அந்த இளைஞரின் தாயார் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பவத்திற்கு முந்தைய நாள் மதியம் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்ற தன் மகன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. ஃபேஸ்புக்கில் வீடியோ வைரல் ஆனதை தன்னுடைய மூத்த மகன் காண்பித்தான். அதன் பிறகே அவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. என் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவன் தான், ஆனால் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. எனவே, அவனுக்கு 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான ஆதாரங்களை போலீசாரிடம் காண்பித்தேன். இருப்பினும் போலீசார் என் மகனை விடுவிக்கவில்லை” என்று அந்த இளைஞரின் தாயார் கூறியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

தொடர்ந்து தேடிய போது வங்கதேசத்தைச் சார்ந்த ஃபேக்ட் செக்கர் ஒருவர் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவு நமக்குக் கிடைத்தது. அதில், “வீடியோவில் உள்ள நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி. அவர் ஷரியா சட்டம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. இந்த சம்பவத்திற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. வகுப்பறைக்குள் நுழையும் போது அவர் காதல் பாடலை பாடிக்கொண்டே வருகிறார். நீ எனக்கு சொந்தம், நீ எனக்கு சொந்தம் என்று கூறியபடி அவர் வகுப்பறையை விட்டு வெளியே செல்வதை வீடியோவை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்.

இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் முதலில் வெளியிட்டவரும் கூட, கல்லூரியில் உள்ள பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இது நடந்தது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். ஆனால் சில தனி நபர்களும், அமைப்புகளும் நடந்த சம்பவத்திற்கு வேறு காரணத்தைக் கற்பித்துள்ளன. கல்லூரி முதல்வரும் கூட இந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உறுதி செய்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இந்த வீடியோவை முதலில் வெளியிட்ட மாணவியின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். அந்த வீடியோவை அவர் அகற்றியிருந்தார். வேறு ஒரு பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதில் “அந்த நபர் மனநலம் பாதிப்புக்கு உள்ளானவர் என்று தெரிந்துகொண்டேன். சிலர் இதை தவறாக பகிர்ந்து வருகின்றனர். தயவு செய்த இதனை எந்த அரசியல் கண்ணோட்டத்திலும் அணுக வேண்டாம். அப்படி நீங்கள் முயற்சித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். 

இதன் மூலம் வங்கதேசத்தில் பெண்கள் படிப்பது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்று கூறி மாணவிகளை விரட்டிய ஜிகாதிகள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வங்கதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கல்லூரிக்குள் நுழைந்து தவறாக நடந்துகொண்ட நிகழ்வின் வீடியோவை ஜிகாதிகள் பெண்களை படிக்கக் கூடாது என்று விரட்டினார்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:வங்கதேசத்தில் கல்லூரியிலிருந்து பெண்களை விரட்டும் ஜிகாதிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False