FACT CHECK: இந்திய சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு லண்டனில் குடியேறும் அம்பானி என பரவும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி லண்டனில் குடியேறுகிறார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “லண்டனில் குடியேறும் அம்பானி குடும்பம்? இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனில் சென்று குடியேற உள்ளதாக தகவல்! பிரிட்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக இருந்த ஸ்டோன் பார்க் பங்களாவை ரூ.592 கோடிக்கு அவர் வாங்கியுள்ளார். 2022 ஏப்ரல் மாதம் அங்கு குடும்பத்தினருடன் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது!” என்று கூறப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “லண்டனில் குடியேறும் அம்பானி குடும்பம்?

குஜராத் காரன் எல்லாம் லண்டன்ல தான் குடியேறுரானுங்க சீக்கிரம் நம்ம குஜராத்தி தாடியும்???

இந்திய சொத்துக்களை கொள்ளையடித்து விட்டு லண்டனில் குடியேறும் அம்பானி….” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Muththu Manikkam என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 5ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி இந்திய சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு, வங்கிகளை ஏமாற்றிவிட்டு, ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது, அதனால் வழக்குகளை சந்திக்க நேரிடும் என்று பயந்து வெளிநாடு தப்பி செல்ல உள்ளார் என்ற வகையில் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தன் குடும்பத்துடன் லண்டனில் குடியேற உள்ளார் என்று செய்தி ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால், உறுதியான செய்தியாக இல்லாமல், கூறப்படுகிறது என்ற வகையில் அந்த செய்தி இருந்தது. தங்களுக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். சன் நியூஸ் தொலைக்காட்சியில் முகேஷ் அம்பானி லண்டனில் குடியேற உள்ளதாக தகவல் பரவி வருகிறது என்று முதலில் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளார். 

https://twitter.com/sunnewstamil/status/1456655299524407301

Archive

சன் நியூஸ் மட்டுமின்றி இந்தியா, தமிழ்நாடு முழுக்க உள்ள எல்லா ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் “முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் லண்டனில் குடியேற இருப்பதாக இணையத்தில் வெளியாகும் தகவல் ஆதாரமற்றவை; லண்டனில் வாங்கிய 300 ஏக்கர் நிலம், தங்களது பொழுதுபோக்கு விடுதியை விரிவுபடுத்தவே – ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்” என்று நியூஸ் கார்டு வெளியிடப்பட்டிருந்தது.

Archive

இந்த சூழலில் முகேஷ் அம்பானி இந்தியாவில் கடன் வாங்கிக் கொண்டு, இந்திய சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு லண்டனில் குடியேற உள்ளது போன்று விஷமத்தனமான தகவல் சேர்த்து சிலர் சமூக ஊடகங்களில் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவுகள் எல்லாம் ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்த பிறகு பதிவிடப்பட்டிருந்தது. எனவே, ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த விளக்க அறிக்கையைத் தேடி எடுத்தோம். 

Archive

அதில் “சமீபத்தில் பத்திரிகைகளில் முகேஷ் அம்பானி லண்டனில் குடியேற உள்ளார் என்று வெளியான செய்தி தவறானது. லண்டன் அல்லது உலகின் வேறு எந்த ஒரு பகுதியிலும் அவரோ அவரது குடும்பமோ குடியேற திட்டமிடவில்லை என்பதை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தெளிவுபடுத்த விரும்புகிறது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் ஆர்ஐஐஎச்எல் நிறுவனம் சமீபத்தில் லண்டன் ஸ்டாக் பார்க் எஸ்டேட்டை கையகப்படுத்தியது. பாரம்பரிய கட்டிடத்தைக் கொண்ட இந்த இடம் கோல்ஃப் மற்றும் விளையாட்டு தொடர்பான விஷயங்களை உள்ளூர் விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியிருந்தனர்.

லண்டனில் பாரம்பரிய கட்டிடத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியதை அடுத்து, முகேஷ் அம்பானி அங்கு குடியேற உள்ளார் என்று செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. வெளிநாட்டில் குடியேறும் திட்டம் ஏதும் இல்லை என்று முகேஷ் அம்பானி சார்பில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

ஆனால், பழைய செய்தியை வைத்துக்கொண்டு முகேஷ் அம்பானி கடன் பெற்றுக்கொண்டு வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளார் என்பது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் முகேஷ் அம்பானி வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளார் என்ற வகையில் பதிவிடும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

முகேஷ் அம்பானி குடும்பம் லண்டனில் குடியேற உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று ரிலையன்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ள நிலையில், தவறான அர்த்தம் வரும் வகையில் பழைய உறுதி செய்யப்படாத செய்தியை தற்போதும் பகிர்ந்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்திய சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு லண்டனில் குடியேறும் அம்பானி என பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context