‘’ காலி நாற்காலிகளுடன் மூச்சு விடாமல் பேசிய அண்ணாமலை.. 100 பேருக்கு 1 லட்சம் நாற்காலி?..’’ என்று கூறி தந்தி டிவி லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’காலி நாற்காலிகளுக்கு முன்பு மூச்சு விடாமல் பேசிய அண்ணாமலை..! 100 பேருக்கு 1 லட்சம் நாற்காலி?’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Facebook Clam Link l Archived Link

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் பார்ப்பதற்கு, எந்த பொதுக்கூட்டத்தை பற்றி பேசுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பும் வகையில் உள்ளது. ஏனெனில், இதில் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தார்.

பல்லடம் பொதுக்கூட்டத்தைப் பார்க்க வந்த மக்கள் குறைவு என்றும், காலி இருக்கைகள் ஏராளமாகக் கிடந்தன என்றும் ஏற்கனவே வதந்திகள் பரவின. நாம் கூட இதுபற்றி ஃபேக்ட்செக் செய்திருக்கிறோம்.

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2

இந்த சூழலில், குறிப்பிட்ட தந்தி டிவி செய்தியும் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளதால், இது பல்லடம் பொதுக்கூட்டம் பற்றியதாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

இதன்பேரில், தந்தி டிவி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட பதிவுகளை தேடினோம். அப்போது, அவர்களது X வலைதள பக்கத்தில் இதுபற்றி பதிவு வெளியிட்டு, பிறகு அதனை டெலிட் செய்திருந்தனர்.

தவறான செய்தியை வெளியிட்டுவிட்டதாக உணர்ந்து, தந்தி டிவி இதனை டெலிட் செய்திருக்கலாம் என்றே நமக்கு தெரிகிறது.

அடுத்தப்படியாக, தந்தி டிவியின் யூடியுப் பக்கத்தில் இதே வீடியோவை வெளியிட்டிருந்தனர்.

இந்த வீடியோவை முழுமையாக பார்த்தோம். அப்போது, ‘திருச்சியில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி நடத்திய பொதுக்கூட்டம் பற்றிய செய்திதான் இது’ என்று தெரியவந்தது.

மேலும், இந்த வீடியோ லிங்க் கூகுள் உதவியுடன் தேடும்போது, மோடியின் புகைப்படத்துடனே காண கிடைக்கிறது.

எனவே, தந்தி டிவி தவறான புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுவிட்டு, அதனை தனது ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தெரியவருகிறது. அதேசமயம், அவர்களது யூடியுப் பக்கத்தில் இன்னமும் இந்த வீடியோ காணக் கிடைக்கிறது.

இந்த முழு உண்மை தெரியாமல் ஃபேஸ்புக், ட்விட்டர் பயனாளர்கள் தந்தி டிவி டெலிட் செய்துவிட்ட பதிவை பகிர்ந்து, மற்றவர்களையும் குழப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மோடி புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்ட செய்தியால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team

Result: Misleading