ராமநாதபுரம் பாவ பூமியாக உள்ளதால் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட விரும்பவில்லை என்று நரேந்திர மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "ராமநாதபுரத்தில் ஏன் போட்டியிடவில்லை... ஶ்ரீராம பெருமான் பாப விமோசனம் பெற்ற ராமநாதபுரம் இன்று ராவணர்களின் பூமியாக, தேச விரோதிகளின் பூமியாக இருக்கிறது. அந்த பாவ பூமியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட விரும்பவில்லை என்பதால் ராமநாதபுரத்தில் போட்டியிடவில்லை - உத்தர பிரதேச கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ராமநாதபுரம் பாவ பூமி என்பதால் அங்கு போட்டியிடவில்லை என்று நரேந்திர மோடி கூறியதாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த நியூஸ் கார்டின் வடிவமைப்பில் சிறு மாறுதலை காண முடிகிறது என்பதால் இது போலியான நியூஸ் கார்டு என்று தெரிந்தது. இதை உறுதிசெய்துகொள்ள ஆய்வு செய்தோம்.

முதலில் புதிய தலைமுறை இப்படி ஏதேனும் நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது, ஏப்ரல் 9, 2024 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் அதில், "காங்கிரஸ் ராமரை இழிவுபடுத்தியிருக்கிறது. ராமர் கோயில் நிகழ்ச்சிக்கான அழைப்பைப் புறக்கணித்ததன் மூலம், காங்கிரஸ் ராமரை இழிவுபடுத்தியிருக்கிறது - உத்தர பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து, ராமநாதபுரத்தை பிரதமர் நரேந்திர மோடி இழிவுபடுத்தியது போன்று தவறான தகவலைப் பகிர்ந்திருப்பது தெளிவானது. இதை உறுதிசெய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை வாட்ஸ்அப்-ல் அனுப்பினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நம்மிடம் தெரிவித்தார்.

மேலும், இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று தங்கள் இணையதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டு, அதை நமக்கு அவர் அனுப்பினார். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

அடுத்ததாக உ.பி-யில் நடந்த பிரசாரத்தில் ராமநாதபுரம் தொடர்பாக நரேந்திர மோடி ஏதும் கூறினாரா என்று அறிய அது தொடர்பாக வெளியான செய்திகளைப் பார்த்தோம். எதிலும் ராமநாதபுரம் பாவ பூமி என்று நரேந்திர மோடி கூறியதாகக் குறிப்பிடப்படவில்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராமநாதபுரம் பாவ பூமியாக உள்ளதால் அங்கு போட்டியிட விரும்பவில்லை என்று நரேந்திர மோடி உத்தர பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பேசினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராமநாதபுரம் பாவ பூமி என்பதால் அங்கு போட்டியிடவில்லை என்று நரேந்திர மோடி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False