ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளைப் பெற்ற பெண்: உலக சாதனையா; வெறும் வதந்தியா?

சமூக ஊடகம் சமூகம்

ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 17 ஆண் குழந்தைகளைப் பெற்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

ஒரு படுக்கையில் 11 பச்சிளம் குழந்தைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அருகில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். பின்னணியில், சூரத் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது.

நிலைத் தகவலில், “ஒரே பிரசவத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 17 ஆண் குழந்தைகள் பெற்ற மகராசி.  29 மணி நேரம் தொடர் போராட்டம் 17 ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த அமெரிக்கப் பெண் உலக சாதனை படைத்தார். ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளை இதுவரை யாரும் பெற்றெடுத்ததில்லை.

இது பற்றி பிரசவத்தின் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் jack morrow கூறும் போது குழந்தைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன. இதுவே நான் பார்க்கும் கடைசி பிரசவம் என கூறும் அளவிற்கு வெறுத்தே போய் விட்டேன். ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளை இதுவரை யாரும் பெற்றெடுத்ததில்லை என கூறினார்.

Catherine Bridges மற்றும் அவரது கணவரும் குழந்தைக்காக நீண்ட நாள் காத்திருந்து கடைசியில் செயற்கைக் கருவுறுதல் மூலம் குழந்தை பெற்றெடுக்க Rhodes தீவு மருத்துவமனையை நாடி இருக்கிறார்கள்……” என்று உள்ளது.

இந்த பதிவை, Thavam Pakkiyam என்பவர் 2018 அக்டோபர் 5ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாதது போல உள்ளது. படத்தில், 21 டெஸ்ட் டியூப் பேபி சென்டர், சூரத் என்று உள்ளது. ஆனால், நிலைத் தகவலிலோ Rhodes தீவு மருத்துவமனை என்று குறிப்பிட்டுள்ளனர். 17 குழந்தைகள் பிறந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்… ஆனால், படத்தில் 11 குழந்தைகள்தான் உள்ளனர். எனவே, இந்த படம் பற்றிய தகவலை அறிய ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

Google Search Link

அப்போது, இந்த படத்தை வைத்து சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக வதந்தி பரவி வருவது தெரிந்தது. இந்த உண்மையா என்று மேற்கொள்ளப்பட்ட பல கட்டுரைகளும் நமக்குக் கிடைத்தன. இந்தியா டைம்ஸ் இணையதளத்தில் வெளியான இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட டாப் 10 இணைய வதந்திகள் பட்டியலில் இந்த புகைப்படம் இருந்தது.

அதில், 2011ம் ஆண்டு 11ம் மாதம் 11ம் தேதி சூரத் டுவென்டி ஃபர்ஸ்ட் சென்ட்சுரி டெஸ்ட் டியூப் பேபி சென்டரில் (மருத்துவமனை) டெஸ்ட் டியூப் சிகிச்சை முறையில் பிறந்த 11 குழந்தைகள் என்பது தெரிந்தது.

Google Search Link

இந்த தகவல் உண்மைதானா என்று அறிய கூகுளில் தேடினோம். அப்போது, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், புகைப்படம் இல்லை. ஆனால், 21 சென்ட்சுரி டெஸ்டியூப் பேபி சென்டரில், 11-11-11 அன்று 11 வெவ்வேறு பெற்றோருக்கு பிறந்த 11 குழந்தைகளை மருத்துவமனை நிர்வாகம் பத்திரிக்கையாளர்களுக்குக் காட்டியது என்று குறிப்பிட்டு இருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் ஒரே பெண் 17 குழந்தைகளைப் பெற்றார் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, வேறு பதிவுக்குத் தவறான படத்தை வைத்துள்ளார்களா, உண்மையில் வெளிநாட்டில் யாருக்காவது ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பிறந்ததா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

Google Search Link

“17 குழந்தைகள், உலக சாதனை” என்ற கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போதும் சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளைப் பற்றிய கட்டுரைதான் முதலில் நமக்குக் கிடைத்தன. இந்தியா டு வெளியிட்ட கட்டுரையைப் படித்துப் பார்த்தோம். அதில் பெண் ஒருவருக்கு 17 குழந்தைகள் பிறந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் உண்மையா என்று ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தனர். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

தொடர்ந்து தேடியபோது ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் என்று ஒரு தகவல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது தெரிந்தது. அதில், அந்த பெண்ணுக்கு எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள் பிறந்ததுதான் உலக சாதனை என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில்,

படத்தில் இருப்பது, சூரத் மருத்துவமனையில் 2011ம் ஆண்டு 11ம் மாதம் 11ம் தேதி வெவ்வேறு பெற்றோருக்குப் பிறந்த 11 குழந்தைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பிறந்ததாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்தி பரவி வருவது தெரியவந்துள்ளது.

ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள் பிறந்ததுதான் கின்னஸ் உலக சாதனை என்பதும், அந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பிறந்தது என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளைப் பெற்ற பெண்: உலக சாதனையா; வெறும் வதந்தியா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •