
கோவாவில் படகு விபத்து ஏற்பட்டது என்றும் அதில் 23 பேர் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் 63 பேரை காணவில்லை என்றும் குறிப்பிட்டு ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இன்று கோவாவில் நடந்த படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேர் உடல் கண்டெடுப்பு 40 பேர் மருத்துவமனையில் அனுமதி 63 பேர் காணவில்லை படகு உரிமையாளர் அதிகப்படியான ஆட்களை ஏற்றியதால் விபத்து” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கோவாவில் படகு விபத்து ஏற்பட்டதாகவோ, அதில் 23 பேர் உயிரிழந்ததாகவோ எந்த செய்தியும் இல்லை. அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்கள் என்ற குழப்பத்தில் இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில் கோவாவில் சமீபத்தில் படகு விபத்து காரணமாக ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் ஏதும் ஏற்பட்டதா என்று தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, இந்த தகவல் தவறானது என்பது தெளிவானது.
தொடர்ந்து தேடிய போது எக்ஸ் தளத்தில் ஒருவர் கோவாவில் இந்த சம்பவம் நடந்தது என்று வெளியிட்ட பதிவுக்கு கோவா போலீஸ் மறுப்பு தெரிவித்த பதிவு நமக்கு கிடைத்தது. அதில், “கோவா கடற்கரை அருகே இந்த படகு கவிழ்ந்த சம்பவம் நடந்தாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தவறானது. இந்த சம்பவம் ஆப்ரிக்காவின் காங்கோவில் கோமா என்ற இடத்தில் நடந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கோமா என்பதைத் தவறாகக் கோவா என்று படித்து சமூக ஊடகங்களில் தவறான தகவலைப் பரப்பியிருக்கலாம் என்று தெரிந்தது.
கோவா போலீஸ் குறிப்பிட்டது போன்று இந்த சம்பவம் காங்கோவில் நடந்ததா, எப்போது நடந்தது என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, காங்கோவில் இந்த படகு கவிழ்ந்த சம்பவம் நடந்ததாக பல செய்திகள் நமக்கு கிடைத்தன. 100க்கும் மேற்பட்டோர் படகில் சென்றதாகவும் அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து 78 பேர் உயிரிழந்ததாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: apnews.com I Archive
காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள மினோவா துறைமுகத்தில் இருந்து படகு புறப்பட்டு கிழக்கு காங்கோவின் கோமாவுக்கு (Goma) சென்று கொண்டிருந்தது. கிடுகு துறைமுகத்தில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் கப்பல் நிறுத்த முயன்றபோது படகு மூழ்கியது” என்று ஏபி நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் கோவாவில் படகு கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்தனர் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
காங்கோ நாட்டில் கோமா என்ற இடத்திற்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை, தவறுதலாக கோவா என்று பதிவிட்டிருப்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
காங்கோவின் கோமா என்ற பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை கோவாவில் படகு விபத்து என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:கோவாவில் நிகழ்ந்த படகு விபத்து என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
