கொல்கத்தாவில் நடந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் காளியாக கோரத் தாண்டவம் ஆடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சற்று நடுத்தர வயது பெண் ஒருவர் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் நடனம் ஆடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "காளி மாதாவின் கோர தாண்டவம்… டாக்டர்கள் வடிவில். யகொடூரமான பேயாட்ச்சி நடக்கும் மேற்கு வங்கத்தில்… R.G Kar மருத்துவமனையில் நடந்த கூட்டு பாலியல் வன்புணர்வை எதிர்த்து அங்குள்ள ஜூனியர் டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர்.

அந்த கல்லூரி முதல்வரான கோஷை எதிர்த்து… தெருவில் நடந்த நாட்டிய நாடகத்தில் ஒரு பெண் டாக்டர் பத்ரகாளியாக மாறி ஆடிய அற்புதமான நாட்டியம். ❤️❤️❤️ நிறைய பகிருங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்த வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, உரிய விசாரணை நடத்தக் கோரி, பணியில் உள்ள மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு கோரி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் காளி போன்று ருத்ர தாண்டவம் ஆடினார் என்று பலரும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த பெண்ணைப் பார்க்கும் போது பயிற்சி மருத்துவர் போல இல்லை. சற்று வயது அதிகமான நபர் போல உள்ளார். இவர் மருத்துவரா அல்லது வேறு ஒரு நிகழ்வின் வீடியோவை தவறாக பகிர்ந்துள்ளார்களா என்று அறிய ஆய்வு செய்தோம். வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். கொல்கத்தாவில் துணிவுடன் வீதியில் இறங்கி போராடும் பெண் என்று இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். ஆனால் இவர் யார் என்று குறிப்பிடவில்லை. தொடர்ந்து தேடிய போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள பெண்ணின் வேறு வீடியோக்கள் கிடைத்தன. அவையும் கொல்கத்தா மருத்துவருக்காக நடந்த போராட்டத்தில் நடனமாடியதுதான்.


உண்மைப் பதிவைக் காண: Facebook

அந்த பெண் தன்னுடைய பெயர் Mokksha என்று ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார். 2024 ஆகஸ்ட் 25ம் தேதி வீதியில் அவர் நடனமாடிய மற்றொரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், "முதுகுத்தண்டு நிமிர்ந்து, சரியென்றும் தவறென்றும் சொல்லத் துணிந்து, சமூகக் காரணங்களுக்காகத் தெருவில் இறங்காவிட்டால் கலைஞன் கலைஞன் அல்ல. கலைஞர்களை வெகுஜனத்துடன் இணைக்கும் மிகப் பழமையான கலை வடிவம் தெருக்கூத்து ஆகும்" என்பது போல குறிப்பிட்டிருந்தார். நடனமாடிய பெண்ணுடைய ஃபேஸ்புக் பக்கம் தான் அது என்பது புகைப்படங்களைப் பார்க்கும் போது தெரியவந்தது.

தன்னைப் பற்றிய சுய விவர குறிப்பு பகுதியில் அவர் தன்னை ஒரு நடிகர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். உளவியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி-யை அவர் அளித்திருந்தார். அதை பார்த்த போது இந்தியா டுடே-யில் வெளியான செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை அவர் பதிவிட்டிருந்தார்.


"Meet actor Mokksha whose street dance at Kolkata protest has gone viral" என்று குறிப்பிட்டு அந்த செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியைத் தேடி எடுத்துப் பார்த்தோம். அதில் அந்த பெண்ணின் பேட்டி வெளியாகி இருந்தது. கே.ஜி.கர் சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தாவில் நடந்து வரும் போராட்டத்தில் நடிகை மேக்‌ஷா வீதி நடனம் ஆடினார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில், தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளவர் மோக்ஷா சென்குப்தா என்று குறிப்பிட்டு அவரது பேட்டியையும் வெளியிட்டிருந்தனர்.


உண்மைப் பதிவைக் காண: instagram.com I indiatoday.in I Archive

அதில், "பெண் மருத்துவர் கொலை சம்பவம் நடந்த போத நான் ஐதராபாத்தில் இருந்தேன். கொல்கத்தாவில் நடந்த இந்த கொடூரமான செயலைப் பற்றி அறிந்தவுடன், நான் என் நகரத்திற்குத் திரும்பினேன். நான் ஒரு கலைஞனாக, தெரு நிகழ்ச்சியை எனது போராட்ட வடிவமாகத் தேர்ந்தெடுத்தேன், எனது கலையைப் பயன்படுத்தி பொதுமக்களின் கவலைகளுக்குக் குரல் கொடுத்தேன்" என்று கூறியதாக பதிவிட்டிருந்தனர்.

தன்னை ஒரு நடிகை என்று அவர் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார். அவர் தன்னை "மருத்துவர்" என்று எங்கும் குறிப்பிடவில்லை. அவர் பி.எஸ்சி உளவியல் படித்ததால் இவர்கள் மருத்துவராக்கிவிட்டார்களா என்ற சந்தேகத்தில் அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினோம். ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் அவருக்கு நம்முடைய கேள்வியை அனுப்பினோம். "நான் பி.எஸ்சி படித்துள்ளேன். பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி உள்ளேன். தற்போது சினிமாவில் நடித்து வருகிறேன். நான் மருத்துவர் இல்லை" என்று பதில் அளித்தார்.

உளவியல் படிப்பு மருத்துவத்தின் கீழ் வந்தாலும் அதை படிப்பவர்கள் மருத்துவர்கள் என்று கருதப்படுவது இல்லை. மருத்துவ உளவியல் சார்ந்த உயர் படிப்பு படித்தவர்கள் கவுன்சலிங், தெரப்பி போன்றவற்றை வழங்குவர்ரகள். இருப்பினும் இவர்கள் மருத்துவர்கள் இல்லை. மனநோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களை மனநல மருத்துவர்கள் (Psychiatrist) என்று சொல்வார்கள்.

பெண் மருத்துவருக்கு நீதிகேட்டு நடந்த போராட்டத்தில் இந்த பெண் நடனமாடியது உண்மைதான். ஆனால் இவர் மருத்துவர் இல்லை. திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஆவார். இதன் மூலம் கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்த கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்காக வீதியில் காளி போன்று நடனமாடிய மருத்துவர் என்று பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.

முடிவு:

கொல்கத்தா மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் நடிகை ஒருவர் நடனமாடிய வீடியோவை பெண் டாக்டர் ஒருவர் பத்ரகாளியாக நடனமாடினார் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Claim Review :   கொல்கத்தாவில் பத்ரகாளி போல ஆக்ரோஷமாக நடனமாடிய பெண் மருத்துவர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Claimed By :  Social Media Users
Fact Check :  MISLEADING