பிரதமர் மோடிக்கு விசா வழங்க மறுத்த சிங்கப்பூர்: உண்மை அறிவோம்!

அரசியல் சமூக ஊடகம்

பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் அரசு விசா வழங்க மறுத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை

Archived link

பிரதமர் மோடியின் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “விசா மறுப்பு… *** அடித்து விரட்டியது சிங்கப்பூர் அரசு” என்று உள்ளது. படத்தின் கீழ்ப் பகுதியில், “மனிதனைக் கொல்லும் மனித மிருகங்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

எப்போது பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் அரசு விசா மறுத்தது என்று எந்த ஒரு ஆதாரத்தையும் வழங்கவில்லை. இந்த பதிவு, 2019 ஜூன் 8ம் தேதி பெரியார் பேரவை பெரியார் பேரவை என்ற பெயர் கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுக்குப் பயணிப்பதாக குற்றச்சாட்டு உண்டு. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற உடன், பிரதமர் மோடியின் இந்த ஆண்டுக்கான பயணத் திட்டம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் அரசு விசா வழங்க மறுத்துவிட்டதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்கள் அளிக்கவில்லை. நாட்டின் பிரதமர் என்ற பதவிக்காவது மரியாதை கொடுத்திருக்கலாம். ஆனால் மிகவும் மரியாதைக் குறைவான வார்ததைகளைப் பயன்படுத்தி பதிவிட்டுள்ளனர்.

முதலில், பிரதமரின் இந்த ஆண்டுக்கான வெளிநாட்டுப் பயணத் திட்டம் பற்றிய அறிவிப்பை கூகுளில் தேடினோம். அதில், இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பாக இந்த ஆண்டுக்கான பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டதாக சில செய்திகள் கிடைத்தன.

SINGAPORE VISA 2.png

புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியைப் பார்த்தோம். அதில், ஜப்பான், கஜகஸ்தான் என்று பல நாடுகளின் பெயர் இருந்தது. ஆனால், சிங்கப்பூர் செல்வது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

அதேபோல், ஆங்கிலத்தில் தேடியபோது, மாலத்தீவு, ஜப்பான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று கூறப்பட்டு இருந்தது. சிங்கப்பூர் பயணம் தொடர்பாக எந்த ஒரு தகவலும் அதில் இல்லை.

பிரதமர் மோடிக்கு விசா வழங்க சிங்கப்பூர் அரசு மறுத்ததா என்று கூகுளில் தேடினோம். அதுபோல எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இதற்கு முன்பு பிரதமர் மோடி எப்போது சிங்கப்பூர் சென்றார் என்று ஆய்வு மேற்கொண்டோம். 2018ம் ஆண்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுவந்தது தெரிந்தது. 2018ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி, ஆசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார். அப்போது எல்லாம் அவருக்கு விசா மறுக்காத சிங்கப்பூர் அரசு, இப்போது மட்டும் எப்படி மறுத்ததாக இவர்கள் செய்தி வெளியிட்டார்களோ தெரியவில்லை.

நாம் மேற்கொண்ட ஆய்வில், பிரதமர் மோடி சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவோ அது ரத்து செய்யப்பட்டதாகவோ எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

பிரதமர் மோடி 2018 நவம்பரில் சிங்கப்பூர் சென்று வந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பிரதமர் மோடிக்கு விசா வழங்க மறுத்த சிங்கப்பூர்: உண்மை அறிவோம்!

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •