தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

எச்.ராஜா புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "தமிழக பாஜக எனும் தேரை அண்ணாமலை முன்னோக்கி இழுத்துவருவார் என டெல்லி தலைமை எதிர்பார்த்தது; ஆனால், அவரோ தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Rg Nhaveenraj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 30ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாஜக கூட்டணி வேண்டாம் என்று அதிமுக கூற காரணமாக இருந்தவர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. இவரது செயல்பாடுகளை பாஜக மூத்த தலைவர்கள் ரசிக்கவில்லை என்று செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த சூழலில் அண்ணாமலையை பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்ததாகச் சிலர் நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமான நியூஸ் 7 தமிழ் நியூஸ் தமிழில் உள்ளது போல் உள்ளது. இருப்பினும் சிறு வேறுபாட்டை வைத்து இது போலியானது என்று அடையாளம் காண முடிந்தது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

தேரை இழுத்து தெருவில் விட்ட அண்ணாமலை என்று எச்.ராஜா கூறினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். எச்.ராஜா அப்படி கூறியதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அண்ணாமலையின் செயல்பாட்டை விமர்சித்து விகடனின் வேறு ஒரு யூடியூப் சேனலில் "தேரை இழுத்து தெருவில் விட்ட அண்ணாமலை" என்று தலைப்பிட்டு வீடியோ வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதிலும் எச்.ராஜா அப்படி கூறியதாகக் குறிப்பிடவில்லை.

அடுத்து இப்படி ஏதேனும் நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ளதா என்று பார்த்தோம். செப்டம்பர் 30ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டையும் அவர்கள் வெளியிடவில்லை. எனவே, அதன் டிஜிட்டல் பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

அதைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் சமூக ஊடக பக்கங்களில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று "FALSE" முத்திரை குத்தி பதிவையும் வெளியிட்டனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தேரை இழுத்து தெருவில் விட்ட அண்ணாமலை என்று எச்.ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தேரை இழுத்து தெருவில் விட்ட அண்ணாமலை என்று கடுமையாக விமர்சித்த எச்.ராஜா என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘தேரை இழுத்துத் தெருவில் விட்ட அண்ணாமலை,’ என்று எச்.ராஜா கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False