
‘’இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள்தான் கட்ட வேண்டும்; பள்ளி, கல்லூரிகளை அல்ல,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’கோயில் இல்லா ஊரில்.. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்று பெரியவர்கள் சொல்வார்கள். பள்ளி, கல்லூரி கூட இல்லாமல் இருக்கலாம். கல்வியை விட பக்திதான் முக்கியம். இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள்தான் கட்ட வேண்டும். பள்ளி, கல்லூரிகளை அல்ல. எடப்பாடி பழனிசாமி வெளிப்படையான பேச்சு.’’ , என்று எழுதப்பட்டுள்ளது.
News தமிழ் 24×7 ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டை, News Tamil 24×7 ஊடகம் வெளியிட்டதா, என்று ஆய்வு செய்தோம். முதலில், அவர்களது சமூக வலைதள பக்கங்களுக்குச் சென்று பார்த்தோம். இதுபோன்ற எந்த நியூஸ் கார்டும் காணப்படவில்லை.
அடுத்தப்படியாக, அவர்களது ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘’எங்களது பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு இது’’, என்று உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அதிமுக ஐ.டி. பிரிவை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர்களும், ‘’இது போலியான நியூஸ் கார்டு. வேண்டுமென்றே திமுக ஆதரவாளர்கள் இதுபோன்ற வதந்தியை பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.
இது மட்டுமின்றி, தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, ஏதேனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளாரா, என்று விவரம் தேடினோம். அப்போது, அரசாங்க பணத்தை எடுத்து, கல்வி வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடாமல், அறநிலையத்துறைக்கு பொதுமக்கள் தரும் நிதியை எடுத்து, திமுக அரசு செலவிடுகிறது, என்று அவர் பேசியதாக, தெரியவந்தது.
கூடுதல் செய்தி ஆதாரம்…
Vikatan l Dinamani l Thanthi TV
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘பள்ளி, கல்லூரிகள் வேண்டாம்; கோயில் கட்டுங்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
