
இந்து அறநிலையத் துறை, இந்து மடங்கள், கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் போர்டு நிலங்கள் மீட்கப்படும் என்று எஸ்டிபிஐ கட்சி தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முபாரக் செய்தியாளர் சந்திப்பு. இந்து அறநிலதுறை மற்றும் மடங்கள், கோயில்களால் ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்ஃ போர்டு நிலங்கள் மீட்க படும் – எஸ்டிபிஐ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “கும்பமேளா நடக்கும் இடம் தொடர்பாக இஸ்லாமியர் ஒருவர் கூறியதுதான் வக்ஃப் சொத்துக்கள் பறிபோகக் காரணம்” என்பது போன்று இஸ்லாமியர்களை பரிகசிக்கும் வகையில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான இடத்தை கோயில்கள் ஆக்கிரமித்துள்ளதாக எஸ்டிபிஐ கூறியது போன்று நியூஸ் கார்டை பலரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே போலியானது என்பது தெரிகிறது. அதன் வடிவமைப்பு, “அறநிலையத்துறை” என்பதை “அறநிலத்துறை” என்றும் “வக்ஃப்” என்பதை “வக்ஃ” என்றும் எழுத்துப்பிழையுடன் எழுதியுள்ளது எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதிப்படுத்தின.
இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம். நியூஸ் 18 தமிழ்நாடு இப்படி ஏதேனும் நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களை பார்த்தோம். 2025 பிப்ரவரி 12ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை நியூஸ் 18 தமிழ்நாடு டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.
இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். அவர் அப்படிப் பேசியதாக, பேட்டி அளித்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. கடைசியாக, பிப்ரவரி 9ம் தேதி எஸ்டிபிஐ நெல்லை முபாரக் நிருபர்களுக்கு அளித்த பேட்டி நமக்கு கிடைத்தது. அதிலும், அவர் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ளது போன்ற கருத்தைக் கூறவில்லை. இதன் மூலம் இந்த தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
இந்து அறநிலையத்துறை, கோவில்கள் ஆக்கிரமித்துள்ள வக்ஃப் வாரிய சொத்துக்கள் மீட்கப்படும் என்று எஸ்டிபிஐ கட்சித் தலைவர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:வக்ஃப் சொத்துகளை இந்து அறநிலையத்துறை ஆக்கிரமித்துள்ளது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Written By: Chendur PandianResult: False


