மாநில அரசின் நலத்திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் அதற்கு டிடிஎஸ் வரி ரூ.10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "மாநில அரசின் நலத்திட்டங்கள் ரொக்கத் தொகையாக வழங்கப்பட்டால் TDS ஆக 10% பிடித்தம் செய்த பிறகே வழங்கப்பட வேண்டும் - நிர்மலா சீதாராமன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Elumalai Maths என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 13ம் தேதி இதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ட்விட்டர் உள்ளிட்ட மற்ற சமூக ஊடக பக்கங்களிலும் இந்த நியூஸ் கார்டு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Archive

உண்மை அறிவோம்:

சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து சில அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் தனியார் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ஜிஎஸ்டி விலக்கு அளிப்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் அடங்கும். இதற்கிடையே பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்த சூழலில், மாநில அரசு வழங்கும் நிதி உதவி திட்டங்களுக்கு TDS எனப்படும் வரி வசூலிக்கப்படும் என்று அவர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு வழங்கும் 1000ம் ரூபாயில் 100 ரூபாயை மத்திய அரசு எடுக்கப் பார்க்கிறது என குற்றம்சாட்டி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

இப்படி ஏதாவது அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டாரா என்று அறிய கூகுளில் தேடினோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. டெல்லி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அவரது பேச்சைத் தேடினோம். ஏஎன்ஐ நிர்மலா சீதாராமனின் பேச்சை முழுமையாக வெளியிட்டிருந்தது. அதில் ஆங்கிலம், இந்தியில் அவர் பேசினார். மாநில நிதி உதவி திட்டங்களுக்கு வரி விதிப்பது பற்றி அவர் கூறியதாக காண முடியவில்லை.

இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். ஜூலை 11ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் அதில், "செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவலை சேர்த்து பகிர்ந்திருப்பது தெளிவானது. இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பினோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மாநில அரசின் நலத்திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவிகிதம் வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மாநில அரசின் நலத்திட்டங்களை பணமாக வழங்கினால் 10% வரி என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False