FactCheck: வைரலாக பகிரப்படும் தமிழிசை சவுந்தரராஜனின் பழைய வீடியோ

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி ரைமிங்காக பேசும் தமிழிசை,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

டிசம்பர் 17, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், ‘’ பெட்ரோல்,டீசல்,கேஸ் மட்டுமல்லாமல் மண்ணெண்ணெய் விலை உயர்வை எதிர்த்தும் ரைம்சில் கண்டனம் தெரிவித்த இந்த சகோதரியை வாழ்த்துவீங்களா ப்ரன்ச்🤣🤣,’’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

உள்ளே, புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றுடன், சபாஷ் சகோதரி எனக் கூறி தமிழிசை சவுந்தரராஜன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி பேசும் காட்சியையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். 

இதனை பார்க்கும்போது, குறிப்பிட்ட வீடியோவை, சமீபத்திய பெட்ரோல், டீசல் விலை உயர்வுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

அத்துடன் கமெண்ட்களை பார்த்தால், இந்த வீடியோவை தற்போதைய நிகழ்வுடன் பலரும் தொடர்புபடுத்தி பேசுவதையும் உணர முடிகிறது. 

உண்மை அறிவோம்:
இதன்படி, 12.02.2020 தேதியிட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டை எடுத்து, அதில் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை தொடர்புபடுத்தி, அதன் கீழே தமிழிசை பேசும் வீடியோவை இணைத்துள்ளனர்.

ஆனால், அந்த வீடியோவை பார்க்கும்போதே, தெளிவாக தெரியவருவது என்னவெனில், பாஜக.,வைச் சேர்ந்தவரான தமிழிசை அவரது கட்சி மத்தியில் ஆட்சி செய்யும் சூழலில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பேசியிருக்க வாய்ப்பில்லை. அத்துடன், தமிழிசை பேசியது, 2014க்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவாகும். அந்த வீடியோவில், அவர் கண்டித்துப் பேசுவது, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை…

இதுபற்றிய கூடுதல் விவரம் பெற, தமிழிசை சவுந்தரராஜனின் தனிப்பட்ட ஆலோசகர் குழுவில் பணிபுரிந்த நமது நண்பர் ஒருவரிடம் விளக்கம் கேட்டோம். அவர், இதனை பார்வையிட்ட பின், ‘’இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல. தமிழிசை தெலுங்கானா மாநில ஆளுநராகச் செயல்படுவது அனைவரும் அறிந்த விசயம். அப்படியிருக்கையில், அவர் எரிபொருள் விலை பற்றி கமெண்ட் சொல்லியிருப்பாரா? இந்த வீடியோ, முன்னர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவர் பேசியதாகும். இதனை தற்போதைய எரிபொருள் விலை உயர்வு சூழலுடன் ஒப்பிட்டு பகிர்ந்து சமூக வலைதளங்களில் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்,’’ எனக் கூறினார்.

எனவே, சரியான விவரத்தைக் குறிப்பிடாமல் பழைய வீடியோவை எடுத்து, தற்போதைய எரிபொருள் விலை உயர்வுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்து, ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:வைரலாக பகிரப்படும் தமிழிசை சவுந்தரராஜனின் பழைய வீடியோ

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context