FACT CHECK: 1236 கி.மீ உயரத்தில் இருந்து குதித்த நபர் என்று பரவும் தகவல் உண்மையா?

அறிவியல் சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

விண்ணில் 1236 கி.மீ உயரத்தில் இருந்து குதித்து பூமிக்கு நான்கே நிமிடத்தில் வந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

விண்வெளியில் இருந்து எந்த ஒரு வாகனம் இன்றி பாதுகாப்பு உடை, உபகரணம் மட்டும் பயன்படுத்தி பூமிக்கு வந்த விண்வெளி வீரர் வீடியோ பகிரப்பட்டுள்ளது. 

நிலைத் தகவலில், “பூமியை நோக்கி ஆஸ்திரியா  நாட்டைச்  சேர்ந்த  விண்வெளி வீரர்  ஒருவர்  ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரம்  அடி  உயரத்திலிருந்து  (1236  கிலோ  மீட்டர்)  கீழே  குதித்து  4 நிமிடங்களில்  பூமியை  வந்தடைந்துள்ளார்.  பூமி  சுற்றுவதை  இதில்  நன்றாகப்  பார்க்க முடிகிறது. கட்டாயம் பார்க்கவும்!!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை 😁😁😜காமெடி கடல் -COMEDY KADAL 😂👏👏 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கணேசன்.சோ என்பவர் டிசம்பர் 3, 2020 அன்று பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோ எடிட் செய்யப்பட்டதோ, திரைப்பட காட்சியோ இல்லை. சில வருடங்களுக்கு முன்பு விண்ணில் இருந்து பூமிக்கு வந்த வீரரின் அசல் வீடியோதான். ஆனால், நிலைத் தகவலில் கூறப்பட்டுள்ள தகவல்தான் சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியது. பூமியில் இருந்து 1236 கி.மீ உயரத்தில் இருந்து அந்த வீரர் குதித்தார் என்று கூறப்பட்ட தகவல் சந்தேகம் அளித்தது. ஒருவர் இருவர் இருவர் இல்லை, ஏராளமானவர்கள் இதை ஷேர் செய்யவே, இது உண்மையா என்று தேடினோம்.

முதலில் இந்த வீடியோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்று பார்த்தோம். ஆஸ்திரியாவைச் சார்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்பவர் 2012ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி விண்வெளியில் 39 கி.மீ (24 மைல்) உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்தார் என்று செய்தி கிடைத்தது. பிபிசி வெளியிட்டிருந்த செய்தியில் 39,045 மீட்டர் அல்லது 128,100 அடி உயரத்தில் இருந்து அவர் குதித்துள்ளார். இதற்கு முன்பு 31,332 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்ததுவே சாதனையாக இருந்தது.

(Infographic: BBC)

அசல் பதிவைக் காண: bbc.com I Archive I espn.com I Archive 2

அவர் 31,000 மீட்டாரைக் கடந்து பூமியை நோக்கி வந்த போது ஒளியின் வேகம் 1.24 அளவுக்கு பயணித்தார். அதாவது மணிக்கு 833.9 மைல் வேகத்தில் பூமியை நோக்கி விழுந்தார். 2516 மீட்டர் உயரத்தை அடைந்த போது சரியாக குதிக்க ஆரம்பித்து 4.22 நிமிடம் ஆன நிலையில் தன்னுடைய பாராஷூட்டை திறந்தார். மொத்தம் 9 நிமிடம் 3 விநாடிகள் இந்த பயணம் அமைந்திருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அவர் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணித்த போது சுழல ஆரம்பித்தார். அந்த சூழலில் சுயநினைவு இழக்கும் அபாயம் அதிகம். அப்படி சுயநினைவை இழந்தால் மண்ணில் மோதி சிதறியிருப்பார் என்று குறிப்பிட்டிருந்தனர். 

விண்வெளி வீரர் 1236 கி.மீ உயரத்தில் இருந்து குதிக்கவில்லை. 39 கி.மீ உயரத்தில் இருந்தே குதித்துள்ளார். மேலும் அவர் நான்கு நிமிடத்தில் பூமியை அடையவில்லை. 4.22 நிமிடத்தில் பாராஷூட்டை இயக்கி பாதுகாப்பாக தரையில் இறங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார். அவர் இறங்கும்போது பூமி சுழல்வது தெரியவில்லை. ஸ்கை டைவ் அடித்த வீரர்தான் அதிக வேகம் காரணமாக சுழன்றுள்ளார். எவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தார் என்பதன் அடி கணக்கை ஓரளவுக்கு சரியாக குறிப்பிட்டுள்ளனர், ஆனால் அதை கி.மீ-ல் சொல்லும் போது தவறாக குறிப்பிட்டுள்ளது உறுதியாகிறது.

மேலும் நாம் இது தொடர்பாக தேடிய போது ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னரின் சாதனையை இன்னொருவர் முறியடித்திருப்பதும் தெரியவந்தது. கூகுள் நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றி வந்த ஆலன் யூஸ்டேஸ் என்பவர் 2014 அக்டோபர் 24ம் தேதி ஃபெலிக்சின் சாதனையை முறியடித்துள்ளார். 

இவர் 135,908 அடி உயரம் (41.425 கி.மீ அல்லது 25.74 மைல்) உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்தார். இவருடைய விண்வெளியில் இருந்து பூமியை நோக்கிய பயணம் 15 நிமிடங்களுக்கு நீடித்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: nytimes.com I Archive

இதன் மூலம் இதுவரை அதிகபட்சமாக 41.42 கி.மீ உயரத்தில் இருந்து மட்டுமே பூமிக்கு ஸ்கை டைவ் அடிக்கப்பட்டுள்ளது. 1236 கி.மீ உயரத்தில் இருந்து பூமிக்கு நான்கு நிமிடத்தில் விண்வெளி வீரர் வந்தார் என்பது தவறான தகவல் ஆகும். இந்த பதிவு உண்மையுடன் சில தவறான தகவலும் சேர்ந்து பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

1236 கி.மீ உயரத்தில் இருந்து விண்வெளி வீரர் ஸ்கை டைவ் செய்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:1236 கி.மீ உயரத்தில் இருந்து குதித்த நபர் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False