
தி.மு.க ஆட்சியில் மணல் கடத்தல் நடப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆற்றில் வரிசையாக லாரிகள் நிற்கும் புகைப்படத்தை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “சோழ மன்னர்களுக்குப் பிறகு காவிரியை தூர்வாறியது தி.மு.க தான் – துரைமுருகன் – தூர்வாரும் போது எடுத்த புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை SelvaKumar Balakrishnan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 27ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆற்று மணல் விற்பனையில் முறைகேடு உள்ளதாக எல்லா ஆட்சியிலும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் மட்டும் மணல் கொள்ளை நடப்பது போன்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். தூர்வாருவது என்ற பெயரில் மணல் கடத்தல் நடக்கிறது… லாரிகள் மிகப்பெரிய வரிசையில் நின்று மணலை அள்ளிச் செல்கின்றன என்று பொருள்படும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புகைப்படம் தமிழ்நாட்டில், எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை. எனவே, இந்த புகைப்படம் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டதா, அல்லது வழக்கம் போல பழைய புகைப்படத்தை இப்போது எடுத்தது போன்று வதந்தி பரப்பியுள்ளார்களா என்று அறிய ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் 2016ம் ஆண்டிலிருந்து செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. GokulaKannan @gokulakannan_e என்ற எக்ஸ் (ட்விட்டர்) ஐடி கொண்டவர் 2016ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இந்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். அதில் அவர் “என்று குறையும் இந்த மணல் கொள்ளை” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் எங்கு எடுக்கப்பட்டது என்று அவர் எதையும் குறிப்பிடவில்லை.

உண்மைப் பதிவைக் காண: maalaimalar.com I Archive
மாலை மலர் இதழ் இந்த புகைப்படத்தை தன்னுடைய செய்தி ஒன்றில் 2017ம் ஆண்டு பயன்படுத்தியிருந்தது. தினத்தந்தி, தினமலர் ஊடகங்களிலும் 2018ம் ஆண்டில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அந்த செய்திகளிலும் கூட இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று தகவல் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: dinamalar.com I Archive
தமிழ்நாட்டில் 2011ல் இருந்து 2021 வரை அ.தி.மு.க தான் ஆட்சியிலிருந்தது. 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க-வின் ஓ.பன்னீர்செல்வமும் அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் முதலமைச்சராக இருந்துள்ளனர். 2016ல் முதன் முறையாக இந்த புகைப்படம் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு செய்தி ஊடகங்கள் தொடர்ந்து இந்த பயன்படுத்தி வந்திருப்பதை உறுதி செய்துள்ளோம்.
தி.மு.க ஆட்சி என்பது 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அமைந்தது. ஆனால் இந்த புகைப்படங்களோ 2016ல் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த புகைப்படம் திமுக ஆட்சியில் ஆற்றில் தூர்வாரும் போது எடுத்தது இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது.
தி.மு.க ஆட்சியில் மணல் கடத்தல் நடக்கிறதா இல்லையா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்த புகைப்படம் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை மட்டும் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளோம்.
முடிவு:
திமுக ஆட்சியில் மணல் கொள்ளை என்று பரவும் புகைப்படம் 2016ல் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
