
ரஷ்ய வீரரை திட்டி விரட்டிய உக்ரைன் சிறுமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சிறுமி ஒருவர் ராணுவ வீரரை எதிர்த்து பேசுகிறார். அவரை அடிக்க கை ஓங்குகிறார். அந்த ராணுவ வீரர் சிறுமியை பார்த்து சிரித்தபடி அங்கிருந்து நகரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், “ரஷ்ய வீரரைக் கோபமாக திட்டும் உக்ரைன் சிறுமி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை Gtamils Focus என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 மார்ச் 4ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழலில் உக்ரைன் தொடர்பாக பல வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ரஷ்ய ராணுவ வீரரை உக்ரைன் சிறுமி எதிர்த்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை முன்பு பார்த்த நினைவு இருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விஷயம் தெரியவந்தது. வீடியோவில் இருக்கும் சிறுமி பாலஸ்தீனத்தைச் சார்ந்தவர் என்றும் இந்த வீடியோ 2012ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும், இஸ்ரேல் ராணுவ வீரரை எதிர்த்து அந்த சிறுமி குரல் எழுப்பினார் என்றும் செய்திகள் கிடைத்தன.
தொடர்ந்து தேடிய போது 2012ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோவும் கிடைத்தது. அதில் அந்த சிறுமியின் பெயர் அஹெத் தமிமி என்றும் இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து குரல் எழுப்பினார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

2012ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த பிறகு அஹெத் தமிமி பிரபலமடைந்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரைத் தாக்கியதாக அஹெத் தமிமி மீது குற்றம்சாட்டப்பட்டு, எட்டு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவர் விடுதலை ஆனதாகவும் செய்திகள் கிடைத்தன.
நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ 2012ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதல் என்பது 2022ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் தொடங்கியது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு முந்தைய இஸ்ரேல் – பாலஸ்தீன வீடியோவை எடுத்து, ரஷ்யா – உக்ரைன் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
ரஷ்ய வீரரை விரட்டிய உக்ரைன் சிறுமி என்று பகிரப்படும் வீடியோ 2012ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ரஷ்ய வீரரை விரட்டிய உக்ரைன் சிறுமி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
