நான் இந்து தீவிரவாதி என்று கூறியவரின் தாயார் பேட்டி என பகிரப்படும் போலி நியூஸ் கார்டு!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

கிஷோர் கே சுவாமி கூறியதால்தான் எனது மகன் ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் பெரியார் பற்றி விமர்சித்தார் என்று அவரது தாயார் குற்றஞ்சாட்டியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பணம் வேண்டாம், மகன்தான் வேண்டும்! பெரியார், அம்பேத்கர் பற்றி இழிவாக பேசினால் இரண்டு லட்சம் தருவதாக கிஷோர் கே சாமி சொன்னதால்தான் என் மகன் அவ்வாறு பேசினார். கிஷோர் கே சாமியை கைது செய்து, என் மகனை வெளியில் கொண்டு வாருங்கள் – கைது செய்யப்பட்டவரின் தாய் உருக்கம்” என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை சத்தியத்தை நேசிப்பவன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 பிப்ரவரி 28ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் சமீபத்தில், ‘’கோட்சேவை ஆதரிக்க மாட்டேன், அதே நேரத்தில் காந்தி மட்டுமின்றி பெரியார், அம்பேத்கர், ஜின்னாவையும் கோட்சே கொன்றிருக்க வேண்டும்,’’ என்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்ததன் மூலம் சர்ச்சையை கிளப்பினார். இவரை உடனடியாகப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இப்படி பேட்டி அளிக்கச் சொன்னதே கிஷோர் கே சாமிதான் என்று ஈஸ்வரின் அம்மா பேட்டி கொடுத்தது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதை பகிர்ந்து வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் அம்மா இப்படி ஏதும் பேட்டி அளித்தாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. கிஷோர் கே சாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டிருந்தார். 

Archive

பாலிமர் நியூசில் இப்படி ஏதும் நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அதிலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு இல்லை. எனவே, பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அவர்களும், ‘’இப்படி எந்த ஒரு செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. இது போலியானது,’’ என்று உறுதி செய்தனர்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் கிஷோர் கே சாமி கூறியதால்தான் என் மகன் பெரியார், அம்பேத்கரை கோட்சே கொலை செய்திருக்க வேண்டும் என்று பேசினான் என்று ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியனின் தாயார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கிஷோர் கே சாமி கூறிதான் நான் இந்து தீவிரவாதி என்று என் மகன் கூறினான் என்று கைது செய்யப்பட்ட ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியனின் தாயார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நான் இந்து தீவிரவாதி என்று கூறியவரின் தாயார் பேட்டி என பகிரப்படும் போலி நியூஸ் கார்டு!

Fact Check By: Chendur Pandian 

Result: False