விழுப்புரம் பஸ் நிலையத்தில் மழை வெள்ளம் என்று பரவும் புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா?

Missing Context அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

விழுப்புரம் பஸ் நிலையத்தில் இன்று பெய்த மழை காரணமாக குளம் போல தண்ணீர் தேங்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மழை வெள்ள பாதிப்பு தொடர்பான புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆசியாவின் மிகப்பெரிய நீச்சல் குளம் ! தமிழகத்தின் பெருமை மிகு அடையாளம் … விழுப்புரம் பேருந்து நிலையத்தின் இன்றைய விடியல் ……” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையில் டிசம்பர் 1ம் தேதி மழை பெய்யத் தொடங்கியது. இந்த நிலையில் விழுப்புரம் நகர பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

மழை பெய்தால் ஒரு விநாடி கூட சாலையில் தேங்காமல் உடனடியாக வடிந்துவிட வேண்டும் என்ற எண்ணம் நெட்டிசன்கள் பலருக்கும் உள்ளது. அடை மழை பெய்யும் போது சில மணி நேரங்களிலிருந்து சில நாட்கள் வரை தண்ணீர் தேங்குவது உலகம் முழுக்க பொதுவான விஷயம்தான். நாம் அந்த விஷயத்திற்குள் செல்லவில்லை.

விழுப்புரம் பஸ் நிலையத்தில் இன்று மழை நீர் தேங்கியதாக பரவும் புகைப்படம் உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் நியூஸ் தமிழ் என்ற ஊடகத்தின் லோகோவை காண முடிந்தது. எனவே, அந்த ஊடகத்தின் யூடியூப் பக்கத்திற்கு சென்று தேடிப் பார்த்தோம். அப்போது கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரத்தில் கன மழை பெய்த போது பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கியதாக செய்தி வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ காட்சியிலிருந்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டிருப்பது உறுதியானது. இதன் மூலம் இந்த வீடியோ டிசம்பர் மாதம் வெளியானது இல்லை என்பது உறுதியாகிறது.

அடுத்ததாக அக்டோபர் மாதம் விழுப்புரத்தில் பெய்த மழை தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். அக்டோபர் 27, 2025 அன்று ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தியில் அன்று இரவு விடிய விடிய இடி மின்னலுடன் 16 செ.மீ அளவுக்கு மழை பெய்தது. இதனால் புதிய பேருந்து நிலையத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியது என்று குறிப்பிட்டிருந்தனர். கன மழை காரணமாக அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐந்து மணி நேரத்தில் மழை நீர் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும் செய்திகள் கிடைத்தன. 

மேலும் இது புதிய விஷயம் இல்லை. 2000ம் ஆண்டு பஸ் நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து மழை வந்தால் குளம் போல் தண்ணீர் தேங்குவது வழக்கமான ஒன்றுதான் என்றும் செய்திகள் தெரிவித்தன. அதிமுக ஆட்சிக்காலத்திலும் கூட வடியாத மழை நீரை அகற்ற விழுப்புரம் நகராட்சி மும்முரம் என்று செய்தி வெளியாகி இருந்ததை காண முடிந்தது.

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் டிசம்பர் 2025ல் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. பழைய புகைப்படத்தை எடுத்து, இன்று நடந்தது போன்று தவறான தகவலை அளித்துள்ளனர். மழை பெய்தால் தண்ணீர் தேங்குவது 25 ஆண்டுகளாக தொடரும் சூழலில் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை மறைத்துப் பதிவிட்டிருப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது.

முடிவு:

விழுப்புரம் பஸ் நிலையத்தில் தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக இன்று பெய்த மழையில் குளம் போல் நீர் தேங்கியதாக படம் ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் இது கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட படமாகும். அதிமுக ஆட்சிக் காலத்திலும் மழை நீர் தேங்கியிருந்தது. இதன் மூலம் பாதி உண்மையை சவுகர்யமாக மறைத்து பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:விழுப்புரம் பஸ் நிலையத்தில் மழை வெள்ளம் என்று பரவும் புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result:Missing Context

Leave a Reply