இஸ்லாத்திடமிருந்து இந்துக்களை ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பதிவிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அஜித் தோவல் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் தொடர்பான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், இஸ்லாம் என்ற வெள்ளத்தைத் தடுத்து இந்துக்களை காக்கும் தடுப்பாக ஆர்.எஸ்.எஸ் இருப்பது போன்று ஓவியம் சித்தரிக்கப்பட்டுள்ளது. "The Flood will break out with full force and no one can stop it Hindus are dining and sleeping in comfort" என்று அஜித் தோவல் பதிவிட்டதாக உள்ளது. நிலைத் தகவலில், "அஜித் தோவல் போன்ற ஒருவர் இதைப் பதிவிடும்போது நாம் இருக்கும் சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஸ்கிரீன்ஷாட்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் குமார் தோவல் உள்ளார். இவர் இந்தியாவில் உள்ள இந்துக்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் காப்பாற்றி வருகிறது என்று கருத்தை வெளியிட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் ஸ்கிரீன்ஷாட் ஒன்றைப் பதிவிட்டு வருகின்றனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகரே இப்படி ஒரு பதிவிடுகிறார் என்றால் இந்துக்கள் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறார்கள் பாருங்கள் என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த பதிவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா அல்லது எடிட் செய்யப்பட்ட பதிவை பகிர்ந்து வருகிறார்களா என்று அறிய ஆய்வு செய்தோம்.


முதலில் அஜித் தோவல் ஃபேஸ்புக் பக்கத்தைத் தேடிப் பார்த்தோம். அஜித் தோவல் பெயரில் பல ஃபேஸ்புக் பக்கங்களைக் காண முடிந்தது. அதில் சில இது உண்மையான அதிகாரப்பூர்வமான பக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தது. இவற்றில் எது உண்மையா அஜித் தோவல் பக்கம் என்பதைக் கண்டறிய முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது. உள்ளே பதிவுகளைப் பார்க்கும் போது யாரோ பாஜக ஆதரவாளர்கள் இந்த பக்கங்களை நிர்வகிப்பதைக் காண முடிந்தது. முழுக்க பாஜக ஆதரவு பதிவுகளாக மட்டுமே இருந்தது. எனவே, இவை எதுவும் அஜித் தோவலின் அதிகாரப்பூர்வமான பக்கமாக இருக்க வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்தது.

கூகுளில் அஜித் தோவல் ஃபேஸ்புக் என்று டைப் செய்து தேடிய போது இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் வெளியான பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், "முக்கிய எச்சரிக்கை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலுக்கு அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் கணக்கு எதுவும் இல்லை. அவரது பெயரில் உள்ள ஏமாற்று அல்லது போலிக் கணக்குகள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


உண்மைப் பதிவைக் காண: Facebook

மேலும், இதே பதிவை வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளராக உள்ள Randhir Jaiswal தன்னுடைய எக்ஸ் தள பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக வெளியான செய்திகளும் நமக்குக் கிடைத்தன.

Archive

அஜித் குமார் தோவலுக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்கள் இல்லை. அவரது பெயரில் போலிகள் விஷமத்தனமான பதிவுகளை வெளியிட்டு வருவது உறுதியாகி உள்ளது. இந்த சூழலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஆதரித்து அஜித் தோவல் பதிவிட்டார் என்ற தகவல் உண்மையில்லை, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

முஸ்லிம்களிடமிருந்து இந்துக்களை ஆர்எஸ்எஸ் பாதுகாத்து வருகிறது என்று இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதும் அவருக்கு ஃபேஸ்புக்கில் கணக்கே இல்லை என்பதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel

Claim Review :   இஸ்லாத்திடமிருந்து இந்துக்களை ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பதிவிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Claimed By :  Social Media Users
Fact Check :  -