
மகாராஷ்டிராவில் வடாலா ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பப்பட்டதாகவும் இதை மகாராஷ்டிராவின் சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ரயில் நிலையத்தில் அரசியல் தலைவர் போல உள்ள ஒருவர் தன்னுடைய குழுவினருடன் நடந்து செல்கிறார். ரயில் ஏற நின்றிருந்த சிலர் ஜிந்தாபாத் என்று குரல் எழுப்புகின்றனர். நிலைத் தகவலில், “அசிம் அஸ்மி ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டவாறு வடாலா ரயில் நிலையத்தில் பதவி ஆசையில் எதையும் கண்டுகொள்ளாத மகாராஷ்டிர சிவசேனாவின் உத்தவ் தாக்ரே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த வீடியோவை முதன் முறை பார்த்தபோது “மும்பை போலீஸ் ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கோஷம் எழுப்பியதுபோல் இருந்தது. மும்பை போலீஸ் வாழ்க என்று கோஷம் எழுப்பிவிட்டு, பாகிஸ்தானுக்கு எப்படி வாழ்த்து கூறுவார்கள் என்ற சந்தேகம் எழுந்தது.
மேலும், ரயில் நிலையம் என்பது மத்திய அரசின் துறை. ஆர்.பி.எஃப் எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் எல்லா ரயில் நிலையங்களிலும் உள்ளனர். இவர்கள் மாநில அரசின் உத்தரவுக்கு கட்டுப்படுபவர்கள் இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று குரல் எழுப்பியவர்களை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.
தொடர்ந்து அந்த வீடியோவை குறிப்பாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியதாக சொல்லப்படும் பகுதியை உற்றுக் கவனித்தோம். அப்போது அது பாகிஸ்தான் ஜிந்தாபாத் இல்லை… சாஜித் அல்லது சாகித் பாய் ஜிந்தாபாத் என்று கூறுவது தெரிந்தது. பல முறை மீண்டும் மீண்டும் கேட்கும்போது “மும்பை போலீஸ் ஜிந்தாபாத், ஷாஜித் பாய் ஜிந்தாபாத்” என்று கூறுவது உறுதியானது.
இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்று அறிய, “மகாராஷ்டிரா, பாகிஸ்தான் ஜிந்தாபாத், சிவசேனா” உள்ளிட்ட கீ வார்த்தைகளை டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது இது மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்வு என்று தெரியவந்தது. தொடர்பான சமூக ஊடக பதிவுகள் கிடைத்தன.
யார் இந்த சாஜித் பாய் என்று தேடியபோது, சமாஜ்வாடி கட்சியின் மும்பை தென் மத்திய மாவட்ட தலைவர் என்பது தெரிந்தது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “மே 14ம் தேதி நானும் எங்கள் தலைவர் அபு அசிம் ஆசிஸ்சும் மும்பையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் உத்தரப்பிரதேசம் செல்லும் தொழிலாளர்களை சந்திக்க மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு சென்றோம். இந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்திருந்தோம். அதனால், அவர்கள் அபு ஆஸ்மிக்கு நன்றி தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள்.
ஆனால், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பியதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். அந்த கோஷம் எழுப்பப்பட்ட போது நிறைய போலீசார் அங்கே இருந்தனர். உண்மையில் அவர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பியிருந்தால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்கள். உண்மையை மறைத்து சிலர் வதந்தி பரப்புகின்றனர். சமூக ஊடகங்களில் பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.
இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ குஜராத்தியில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
கோஷமிடுபவர்களின் முகத்தைக் காட்டும் வீடியோ ஒன்றையும் அவர் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவுக்கு அளித்தார். அந்த வீடியோவில் கோஷமிடுபவர் உதடு அசைவை வைத்துப் பார்க்கும்போது அவர் சாஜித் பாய் ஜிந்தாபாத் என்று கோஷமிடுவது தெளிவானது.
இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ அபு அசிம் ஆஸ்மி வெளியிட்ட ட்வீட் கிடைத்தது. அதில், “என் நாட்டில் யாராவது என் முன்பாக பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பினால் போலீசாருக்கு முன்னதாக அவர்களுக்கு தக்க பாடத்தை நான் கற்பிப்பேன். 2014ம் ஆண்டு முதல் சிலர் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதற்கு இந்து – இஸ்லாமிய நிறத்தை பூசுகின்றனர். பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புகிறவர்கள் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.
நம்முடைய ஆய்வில்,
வீடியோவில் ஷாஜித்பாய் ஜிந்தாபாத் என்று கோஷமிடுவது தெளிவாக கேட்கிறது.
கோஷமிட்டவரின் உதடு அசைவு ஷாஜித்பாய் ஜிந்தாபாத் என்று கூறுவதை கேட்க முடிகிறது.
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதாக வதந்தி பரப்பப்படுவதாக சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ புகார் அளித்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டவர்கள் மீது பதவி ஆசை காரணமாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.

Title:பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட நபர்களை கண்டுகொள்ளாத உத்தவ் தாக்கரே!- உண்மை என்ன?
Fact Check By: Chendur PandianResult: False
