"சாதி தேவை என்று முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கூறிவிட்டார்" என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பேசிய பழைய வீடியோவை எளிதில் அடையாளம் கண்டுவிட முடியாத அளவுக்கு எடிட் செய்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் அவர், "இன்றைக்கு சாதி தேவைதான். எதற்கு... நான் யார் என்று சொன்னால் தான் எந்த வகுப்பென்று தெரியும். அங்கே உட்கார்ந்திருக்கும் ஒரு பெரியவரை ஏதோ ஒரு இளைஞரை திடீரென்று கையை காட்டி அவர் எந்த சாதி என்று கேட்டால் எனக்குத் தெரியாது. திடீரென்று வெளியூரில் இருந்து வருகிறவரை பார்த்து கேட்டால் அவருக்குத் தெரியாது. உள்ளூரில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்.. உற்றார் உறவினர்களுக்குத் தான் தெரியும்" என்று பேசுகிறார்

நிலைத் தகவலில், "சாதி ஒழிப்பு சனாதன பெரும் புடுங்கிகளே வாரீர்!.. சாதி தேவைதான் கட்டுமர உரை!..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சாதியின் பெயரால் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும் என்று முற்போக்கு சிந்தனையாளர்கள் பேசி வருகின்றனர். சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியே, சாதி தேவை என்று பேசியதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த வீடியோ முழுமையானதாக இல்லை. முழு வீடியோவை வெளியிட்டிருந்தால் அவர் பேசிய அர்த்தம் புரிந்திருக்கும். ஆனால் எடிட் செய்யப்பட்ட வீடியோ தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. உண்மையில் கருணாநிதி என்ன சொன்னார் என்று அறிய ஆய்வு செய்தோம்.

மு.கருணாநிதி பேசிய வீடியோக்கள் பல யூடியூபில் உள்ளன. அதில் இந்த பேச்சு எதிலிருந்து எடுக்கப்பட்டது என்று அறிய முடியாவாறு, வீடியோவை எடிட் செய்திருந்தனர். அதனால் கூகுள் லென்ஸ் தளத்தில் இந்த வீடியோவில் இடம் பெற்ற காட்சியைப் புகைப்படமாக மாற்றி, தேடியபோது எந்த முடிவும் நமக்குக் கிடைக்கவில்லை.

எனவே, கூகுள் தளத்தில் சாதி தேவை, கலைஞர், கருணாநிதி என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது யூடியூபில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போன்ற வீடியோ நமக்குக் கிடைத்தது. "சாதி சான்று ஏன்? கலைஞர் உரை" என்று தலைப்பிடப்பட்டிருந்தது. "ஆலவயல் சுப்பையா Ex MLA இல்லத் திருமண விழா" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் மு.கருணாநிதி பேசும் போது, “ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் சொல்கிறோம். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமா இல்லை... சொல்லுகிறோம், ஏற்றுக்கொள்வது இல்லை. இன்றைக்கு சாதி தேவைதான். எதற்கு... நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். நாங்கள் உயர முடியவில்லை, உயர முடியாமல் அழுத்தப்பட்டோம், ஒடுக்கப்பட்டோம். கல்வியில், வேலைவாய்ப்பில் எங்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை.

அப்படி கிடைக்காததற்குக் காரணம் உயர் சாதிக்காரர்கள், முன்னேறிய சாதிக்காரர்கள் முந்திக் கொண்டு, எங்களை மேலும் மேலும் அழுத்திப் போட்டுவிட்டார்கள். ஆகவே எங்களுக்கு சில உரிமைகள் வேண்டும் எனவே இந்த சாதியை சொல்லிக்கொள்கிறோம் என்று ஒரு அடையாளத்துக்காகத்தான் சாதி சொல்லப்பட வேண்டுமே அல்லாமல், நாங்கள் தனித்துத்தான் வாழ்வோம் தனியாகத்தான் இருப்போம் என்பதற்காக அல்ல சாதி" என்று கூறுகிறார்.

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இடஓதுக்கீட்டு உரிமையைப் பெற என்ன சாதி என்று சொல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக மட்டுமே சாதி தேவை என்று மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். மற்றபடி சாதி பெருமை பேச சாதி தேவை என்ற அர்த்தத்தில் அவர் பேசவில்லை என்பது முழு வீடியோவை பார்க்கும் போது தெளிவாகிறது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவில், மு.கருணாநிதி பேசியதின் பெரும்பகுதியை அகற்றிவிட்டு, தவறான அர்த்தம் வரும் வகையில் சாதி வேண்டும் என்று அவர் கூறிய ஒற்றை வரியை மட்டும் எடிட் செய்து வைத்து வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. வீடியோவை எடிட் செய்து, நடுவில் பல விஷயங்களை அகற்றிவிட்டு மு.கருணாநிதியை மற்றவர்கள் இகழவேண்டும் என்பதற்காக வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியொ எடிட் செய்யப்பட்டது, தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இடஒதுக்கீட்டை பெற சாதி தேவைப்படுகிறது என்று கருணாநிதி பேசியதை சாதி தேவை என்று கருணாநிதியே கூறிவிட்டார் என்று வீடியோவை எடிட் செய்து விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel
Claim Review :   \"சாதி தேவை என்று முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கூறிவிட்டார்\" என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Claimed By :  Social Media Users
Fact Check :  ALTERED